அறிமுகம்:
கண்களை அகற்றிய நோயாளிகளுக்கு அவர்களின் கண் குழிகளில் செயற்கை கண் பொருத்தப்படும். நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கக்கூடிய PMMA எனப்படும் உயர் தர அக்ரலிக் பொருளால் செயற்கை கண் உருவாக்கப்படும். ரெடிமேடாகவும் செயற்கை கண்கள் உள்ளன. கண் குழிகளுக்கு ஏற்ற வகையில் அளவு எடுத்து பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் செயற்கை கண்களும் உள்ளன. இந்தக் கண்களால் பார்வை அளிக்க முடியாது. முகத்தை இயல்பான தோற்றத்தில் வைத்திருக்கவே செயற்கை கண்கள் பொருத்தப்படுகின்றன. கண்களில் புற்றுநோய் தீவிரமடைந்திருந்தாலோ கண்களில் பலமாக அடிபட்டிருந்தாலோ கண்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்படும்.  கண்களில் தீவிர நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ கண் நீர் அழுத்தம் தீவிரமடைந்திருந்தாலோ சிலருக்கு செயற்கை கண் பொருத்தும் நிலை ஏற்படும்.
செயற்கை கண்களை உருவாக்கும் விதம்:
அடர்த்தியான உயர்தர அக்ரலிக் பொருளால் செயற்கை கண் உருவாக்கப்படும். கண் குழிகளில் உறுத்தல் ஏற்படாதபடி செயற்கை கண் தயாரிக்கப்படும். நோயாளியின் கண்கள் அகற்றப்பட்ட பிறகு, கண் குழியை அளவெடுத்து அதற்கு ஏற்றவாறு மெழுகில் மாதிரி செய்யப்பட்டு அதற்கு ஏற்றபடி செயற்கை கண் தயாரிக்கப்படும். தயாரிக்கப்பட்ட பிறகு, மற்ற கண் உள்ள நிறத்திற்கு ஏற்ப செயற்கை கண்ணிற்கு வண்ணம் பூசப்படும். கண் குழியினுள் கச்சிதமாகப் பொருந்துவதால் ரெடிமேடு கண்ணை விட அளவெடுத்து செய்யப்படும் செயற்கை கண், மிகவும் இயல்பாக இருக்கும். நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியது. அரவிந்த்  கண் மருத்துவமனையில் இயங்கும் செயற்கை கண் பிரிவானது 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் தலைசிறந்த செயற்கை கண் மையமாகத் திகழ்கிறது. இந்த மையம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 11,000 நோயாளிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் சேவை வழங்கியுள்ளது.
பராமரிக்கும் முறைகள்:
  • சுத்தமான தண்ணீரைக் கொண்டு செயற்கை கண்ணை சுத்தம் செய்ய வேண்டும்.
  • கண்கள் வறண்டுவிடாமல் தடுக்க, காலை, மாலை என இரு வேளைகளிலும் மருத்துவரின் பரிந்துரைப்படி சொட்டு மருந்து போட வேண்டும்.
  • ஒரு மாதத்திற்கு ஒருமுறை கண்களை சுத்தம் செய்ய வேண்டும்.
  • வருடத்திற்கு ஒருமுறை, மறுபரிசோதனைக்காகவும் செயற்கை கண்களை பாலிஷ் செய்வதற்கும் மருத்துவமனை செல்ல வேண்டும்.
  • செயற்கை கண்ணில் தேங்கியுள்ள உப்பை நீக்கவும், சிறிய அளவில் கீறல்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை நீக்கவும் பாலிஷ் செய்யப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
  1. அறுவை சிகிச்சை முடிந்து எத்தனை நாட்களுக்கு பிறகு செயற்கை கண் பொருத்தப்படும்?

காயம் குணமடைந்தபிறகு, வீக்கம் ஏற்பட்டிருந்தால் அது வடிந்ததும் செயற்கை கண் பொருத்தப்படும். பொதுவாக, அறுவை சிகிச்சை முடிந்து ஆறு வாரங்கள் கழித்து செயற்கை கண் பொருத்தப்படும்.

  1. பார்ப்பதற்கு மற்ற கண்ணைப் போலவே செயற்கை கண் இயல்பாக இருக்குமா?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் செயற்கை கண்ணைப் பொறுத்தது. ரெடிமேடு செயற்கை கண், விலை மலிவானது. ஒரே நிறத்தில்தான் ரெடிமேடு செயற்கை கண் இருக்கும். அளவெடுத்து தயாரிக்கப்படும் கண்ணில் மற்ற கண்ணின் நிறத்திற்கு ஏற்ப வண்ணம் தீட்டப்படும்.

  1. மற்ற கண்ணைப் போல செயற்கை கண் அசையுமா?

இயல்பான கண்ணைப் போன்றதல்ல செயற்கை கண். ஓரளவு அசையுமே தவிர. இயல்பான கண்ணைப் போல நன்றாக அசையாது. ரெடிமேடு செயற்கை கண்ணை விட அளவெடுத்து தயாரிக்கப்படும் கண்ணில் அசைவு நன்றாக இருக்கும்.

  1. தூங்கும்போது செயற்கை கண்ணை அகற்ற வேண்டுமா?

வேண்டாம். அவசியம் இல்லை.

  1. செயற்கை கண்ணை சுத்தம் செய்ய வேண்டுமா?

ஆம். ரெடிமேடு கண்ணை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். அளவெடுத்து செய்யப்படும் செயற்கை கண்ணை மாதம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். சாதாரண குழாய் நீரிலேயே சுத்தம் செய்யலாம்.

  1. அடிக்கடி மாற்ற வேண்டுமா?

ரெடிமேடு செயற்கை கண்ணை வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அளவெடுத்து செய்யப்படும் செயற்கை கண்ணை, 10 வருடங்களுக்கு பயன்படுத்தலாம்.

Back to English Version