இது நடக்கும் என கனவிலும் நினைத்திருப்போமா?

அமெரிக்காவில் உள்ள குளோபல் ஹெல்த் குரூப் அமைப்பின் இயக்குநர் Dr. ரிச்சர்ட் ஃபீச்சம், அரவிந்த் பணியாளர்களுக்கு கடந்த 04.12.2019 ஆற்றிய உரையின் ஒரு பகுதி இங்கே..

 … H1N1 எனும் ஸ்வைன் காய்ச்சல் போன்ற எளிதில் பரவும் தன்மையையும் H5N1 எனும் பறவை காய்ச்சல் போன்ற அதிக ஆபத்தை ஏற்படுத்தும் தன்மையையும் ஒன்றாகக் கொண்ட ஒரு வைரஸ் நம் அனைவரையும் ஒரு நாள் நிச்சயம் தாக்கும்.

அப்போது மிகப்பெரும் சிக்கலுக்கு நாம் உள்ளாவோம். அந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவும். குறைந்தது 200 மில்லியன் மக்கள் உயிரிழப்பர். எண்ணிக்கை அதிகமாகும் அபாயமும் உள்ளது. ஒருவரும் பணிக்கு செல்லப் போவதில்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து மிக மோசமான நஷ்டத்திற்கு உள்ளாவோம்.

உலகமே மிகப்பெரும் பேரழிவிற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது அந்த வைரஸால் நாம் தீவிர பாதிப்பிற்கு ஆளாகி இருப்போம். 

நடக்க உள்ளதைத் தவிர்க்க, நம் கைகளில் எதுவும் இல்லை.

தொற்றுநோயின் உறுதியை அவர் கணித்தாலும், யார் அதை அப்போது நம்பியிருப்பார்கள்? ஆனால், அந்நேரம் சீனாவில் அந்த வைரஸ் உருவாகியிருந்தது.

பின்வருபவையெல்லாம் நடக்கும் என நாம் கனவிலும் எண்ணியதில்லை.

– இயல்பான பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த உலகமும் ஸ்தம்பித்தல்.

– நான்கு வாரங்களுக்கு மேலாக, அரவிந்த் கண் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படுதல். (நமது நிறுவனர் இறந்தபோதுகூட அரவிந்தின் கதவுகள் மூடப்படவில்லை. அதை அவர் விரும்பியிருக்கவும் மாட்டார்.)

– உலகெங்கிலும் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் மூடப்பட்டாலும்
அரவிந்தின் செவிலியர்களும் சில பயிற்சி மருத்துவர்களும் பாதுகாப்பான அரவிந்தின் தங்கவைக்கப்பட்டு, அவர்களது பாதுகாப்பை சமையல் பணியாளர்களும் இல்லப் பராமரிப்புப் பணியாளர்களைக் கொண்ட பிரத்யேக குழு ஒன்று உறுதி செய்தல் மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் வழங்கப்படுதல். செவிலியர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தங்கியுள்ள அரவிந்தின் விடுதிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு அவற்றில் செவிலியர்களும் மருத்துவர்களும் மிகப் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்படுதல்.

– ஊரடங்கு காலத்தில் மருத்துவமனை செயல்பாடுகள் மாற்றமடைதல். மருத்துவத்திற்கான மென்பொருட்களை அதற்கேற்ப மாற்றியமைக்கும் பணிகளில் மென்பொருள் பொறியாளர்களும் கணினி நெட்வொர்க்கிங் பணியாளர்களும் தொடர்ச்சியாக பணிபுரிந்து தங்கள் ஆதரவை அளித்தல்

– பெரும்பாலான பணியாளர்கள், வீட்டிலிருந்தே ஆன்லைனில் தொடர்ந்து ஆக்கபூர்வமான பணிகளை வழக்கமான பணி நேரத்தை விடவும் அதிகமாகப் பணிபுரிதல்.

இந்த அசாதாரண சூழ்நிலையை சவாலுடன் எதிர்கொள்ளும் அரவிந்த், எப்போதும்போல இதையும் ஒரு வாய்ப்பாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து செயலாற்றுகிறது. வழக்கம்போல இப்போதும் நோயாளிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் பணியாளர்களின் மேம்பாடு, பயிற்சி, பாதுகாப்பு மீதும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

கொரானா ஊரடங்கும் அரவிந்தின் செயல்பாடுகளும்

அவசர கண் சிகிச்சைகளை மட்டும் அளிக்கும் பொருட்டு அனைத்து அரவிந்த் மருத்துவமனைகலும் தொடர்ந்து செயல்படுகின்றன. நிலைமை சீரடையும் வரை சிறப்புப் பிரிவுகளுக்கான சிகிச்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அரவிந்த் மருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பாதுகாப்பு வழிமுறைகள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகின்றன.

தொடரும் மருத்துவ சேவை

மருத்துவமனைக்கு வருகிறவர்களுக்கு மட்டுமே மருத்துவ சேவை எனும் வழக்கமான கட்டமைப்பை அரவிந்த் எப்பொழுதோ மாற்றியமைத்து விட்டது. இணையவழி ஆலோசனை சேவையானது அரவிந்த் விஷன் சென்டர்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் அனைவராலும் இயல்பாக வரமுடியாததால் அவர்களுக்கான மருத்துவ சேவை தடைப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து, அனைத்து அரவிந்த் மருத்துவமனைகளிலும் காணொளி ஆலோசனை (e-consultation) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 400-க்கும் அதிகமானோர் அரவிந்த் இணையதளத்தில் உள்ள காணொளி ஆலோசனை வசதி மற்றும் பிரத்யேக வாட்ஸ்அப் எண்கள் வழியாக வழங்கப்பட்ட ஆலோசனைகளால் பயனடைந்துள்ளனர்.  இவ்வசதிக்கு  மக்களிடம் போதிய வரவேற்பு உள்ளதை அறிய முடிகிறது. காணொளி ஆலோசனை சேவையை எதிர்காலத்திலும் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை அரவிந்த் ஆய்வு செய்கிறது.

வாழ்க்கை, ரம்மியமானது

அரவிந்தின் முதுகெலும்பாகத் திகழ்வது செவிலியர்கள்தான். நோயாளிகளை கவனித்தல், மருத்துவ நடைமுறைகளை மிக கவனமாக மேற்கொள்ளுதல், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுதல் என அவர்களின் வழக்கமான பணிநாள் என்பது பரபரப்பானது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 வரை இதில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து அரவிந்த் விடுதிகளிலும் தங்கியுள்ளவர்களுக்கு கொரானா பெருந்தொற்று பரவாமல் தடுக்கும் முனைப்புடன் கவனத்துடன் பாதுகாப்பது இமாலய சவால். ஆனால் அரவிந்தின் மூத்த நிர்வாகிகளின் தெளிவான திட்டமிடலும் முறையான செயல்படுத்துதலும் இந்த சவாலை எதிர்கொள்ள உதவுகின்றன. அரவிந்தின் அனைத்து விடுதிகளிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றவும் அவற்றை மிகத்தீவிரமாகக் கண்காணிக்கவும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

குடும்பத்தினரைப் பிரிந்து அரவிந்தின் விடுதிகளில் தங்கியுள்ள பெரும்பாலான இளம் செவிலியர்கள் ஏதேனும் உணர்வுரீதியான அழுத்தத்திற்கு உள்ளாவர். விடுதிகளுக்கு உள்ளேயே இருக்கும்படி கூறுவதால் சோர்வும் அலுப்பும் அவர்களை எளிதில் தொற்றிக்கொள்ளும். ஒய்வு நேரங்களை ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவிட வைக்க, பல செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிறப்பம்சம் யாதெனில் அவர்களுக்கு விருப்பமான செயல்பாடுகளைத் அவர்களே தேர்ந்தெடுக்கலாம். யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. விருப்பத்துடன் ஈடுபட்டால் சிறப்பான விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் நன்கு உணர்ந்துள்ளோம்தானே.

நம் செவிலியர்கள் விருப்பமுள்ள செயல்பாடுகளை பேரார்வத்துடன் அவர்களுக்குள் ஒளிந்துள்ள பல தனித்திறமைகள் வெளிப்படுகின்றன. அவர்களது தனித்திறமைகளுக்கு அங்கீகாரமும் பாராட்டுகளும் கிடைக்கினறன. ஊரடங்கு காலத்தில் தங்கள் வீடுகளில் இருந்தால்கூட இத்தனை உற்சாகத்துடன் இருந்திருக்க மாட்டார்கள். தங்களுக்கு விருப்பமானவற்றை செய்வதற்கு நேரமில்லை எனக் கூறிக்கொண்டு பணி, குடும்பம் என பரபரப்பாக இயங்கிய பிற பணியாளர்களுக்கும் இந்த ஊரடங்கு அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளது. வீடுகளிலேயே வாரக்கணக்கில் தங்கியுள்ளதால் தற்போது தங்களுக்கு விருப்பமானவற்றைச் செய்து மகிழ்கின்றனர்.

உடனடி தேவை மீது குவியும் கவனம்

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் ஆரோலேபின் அனைத்து வழக்கமான பணிகளும் நிறுத்தப்பட்டன. மருத்துவப் பணியாளர்களுக்காக Personal Protective Equipment (PPE) எனும் பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் பணி மீது தனது காவத்தை ஆரோலேப் திருப்பியது. கைகளில் தடவிக்கொள்ளும் கிருமி நாசினிகளின் (sanitizers) தேவை அதிகமாக உள்ளதால் அவற்றை அதிகளவில் உற்பத்தி செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது நோய்த் தொற்று ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, ஸ்லிட் லேம்ப்பில் வைக்கும்படியான பாதுகாப்பு கவசத்தையும் மருத்துவர்கள், முகத்தில் அணிந்து கொள்ளும்படியான முக கவசத்தையும் வடிவமைத்து உற்பத்தி செய்தது. இந்த முகக் கவசங்கள் கண் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமல்ல. சமூகத்தில் பலருக்கும் பெரும்பயன் அளிக்கவுள்ளன. கொரானா பெருந்தொற்று காலத்தில் கண் மருத்துவப் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு வகையான பாதுகாப்பு கவசங்களை (PPE) பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதிலும் ஆரோலேப் ஈடுபட்டுள்ளது. இந்த வழிகாட்டும் நெறிமுறைகள் பாதுகாப்பு கவசத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் அரவிந்திற்கு மட்டுமல்ல, லைக்கோ சேவைகளைப் பெறும் மருத்துவமனைகளுக்கும் ஒட்டுமொத்த கண் மருத்துவத் துறைக்கும் பயனுள்ளதாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கண் மருத்துவர்களுக்கும் கைகளில் தடவிக்கொள்ளும் கிருமி நாசினிகள் (sanitizers) – 2,  முகக் கவசங்கள் – 2 மற்றும் ஸ்லிட் லேம்ப் கவசம்-1 ஆகியவற்றை ஆரோலேப் இலவசமாக வழங்குகிறது. பொருட்களை அனுப்புவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் இவற்றை நாடு முழுவதும் உள்ள கண் மருத்துவர்களுக்கு வழங்க ஆரோலேப் திட்டமிட்டுள்ளது.

தடைபடாத லைக்கோ பணி

நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஊரடங்கு காலத்திலும் லைக்கோ அதிகாரிகள் (LAICO Faculty) முழு வீச்சுடன் பணியாற்றி வருகின்றனர். தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையில் லைக்கோ அதிகாரிகளின் காணொளி குழு சந்திப்பு (Video Conferencing Call) நடத்தப்படுகிறது. இந்த தினசரி சந்திப்பில் அவரவர் தனித்தனியாகவும், குழுவாகவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பகிர்ந்து கொள்ளப்படுன்றன. இவற்றுடன் கூடுதலாக, அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் கேர் இம்ப்ரூவ்மென்ட் எனும் நிறுவனம் வழங்கும் பயிற்சித் திட்டத்தை லைக்கோ அதிகாரிகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஆன்லைனில் குழுவாகப் பயில்கின்றனர்.

பகிர்தல் எனும் பெரும்செயல்

இதுவரை வெளியான பல்வேறு வழிகாட்டுதல்களை ஆராய்ந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள மற்ற மருத்துவ நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டும் தலைவர் Dr. ஆர்.டி.ரவீந்திரனின் தலைமையில் அரவிந்தின் மூத்த தலைவர்கள் தரமான கண் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளனர். அரவிந்தின் பணியாளர்களைப் பாதுகாக்கவும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும் இந்த நெறிமுறைகள் உதவுகின்றன. எனினும், நோய்த்தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ள இக்காலத்தில் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது எனும் கையறு நிலையில் இந்தியாவில் பல சிறிய கண் மருத்துவமனைகள் உள்ளன. அவர்களுக்கு உதவும் நோக்கத்துடனும் லைக்கோவின் சேவைகளைப் பெறும் நேச மருத்துவமனைகளுக்கும் பயனளிக்கும் நோக்கத்துடனும் காணொளி கருத்தரங்கை (Webinars) வாரந்தோறும் லைக்கோ நடத்தி வருகிறது. இந்தக் கருத்தரங்குகளின் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

முதல் காணொளி கருத்தரங்கமானது 15 ஏப்ரல் அன்று “கொரோனா வைரஸின் தன்மைகள், தாக்கம் மற்றும் மருத்துவ முறைகள்” குறித்து Dr. பானுஸ்ரீ அவர்களும், “கொரோனா வைரஸும் கண் மருத்துவமும்” என்கிற தலைப்பில் Dr.வெங்கடேச பிரஜ்னா அவர்களும், “கொரோனா காலத்தில் அரவிந்தின் அணுகுமுறைகள்” என்று Dr.வெங்கடேஷ் அவர்களும் உரையாற்றினர் (வீடியோவைப் பார்க்க). அடுத்த கூட்டம், ஏப்ரல் 24 ம் தேதி அன்று “கண்மருத்துவத்தில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE in eye care)” என்கிற தலைப்பில் மருத்துவமனை பணியாளர்களால் நடத்தப்படவுள்ளது. கூடுதலாக, பிற மருத்துவமனைகளின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளின் அடிப்படையில் தலைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவும் வண்ணம் (Virtual Classes) மற்றும் காணொளி கருத்தரங்கங்கள் நடத்தப்படும்.

இத்தனை நாட்கள் ஊரடங்கு நீடிப்பது, இதுவே முதல்முறை. அரவிந்திலும் சில செயல்பாடுகள், முதல்முறையாக நடத்தப்படுகின்றன. அதில் ஒன்று, திருநெல்வேலி அரவிந்தில் நடத்தப்படவிருந்த மருத்துவ கருத்தரங்கம் (CME), ஆன்லைனில் நடத்தப்பட்டது.

மார்ச் 22 அன்று கருத்தரங்கத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பதட்டநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. கண் மருத்துவத்தில் படங்களின் பங்களிப்பானது பல பரிமாணங்களைக் கண்டு வருகிறது. இந்த கருத்தரங்கத்தில் உரையாற்றவிருந்த அரவிந்தின் மருத்துவர்களும் பிற மருத்துவமனை மருத்துவர்களும் தங்களது உரைகளை விரிவாகத் தயார் செய்திருந்தனர். இவர்களின் உழைப்பையும் பங்கேற்பாளர்களின் ஆர்வத்தையும் கணக்கில் கொண்டு ஒருநாளைக்கு 90 நிமிடங்கள் என பல்வேறு தலைப்புகளில் காணொளி கருத்தரங்கை திருநெல்வேலி அரவிந்த் நடத்தியது. தங்களது இணைய வசதிகளைக் கொண்டே மருத்துவர்கள் நேரடி ஒளிபரப்பில் பங்கேற்று அற்புதமான உரைகளை வழங்கினர். பங்கேற்பாளர்களிடமும் பெரும் வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் சராசரியாக Zoom எனும் இணையதளத்தில் 100 பங்கேற்பாளர்களும் Youtube இணையதளத்தில் 700 பார்வையாளர்களும் பங்கேற்றனர் (வீடியோவைப் பார்க்க).

கொரானா காலத்திலும் கற்றல் செயல்பாடுகள்

அரவிந்த் விஷன் சென்டர்கள், மார்ச் மூன்றாம் வாரத்திலிருந்து மூடப்பட்டுள்ளன. பணி இல்லாத இந்த நாட்களை ஆக்கப்பூர்வமான பயிற்சிகளில் ஈடுபடுத்தவும் கண் மருத்துவம் தொடர்பான அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் விஷன் சென்டர் பணியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டது. வாட்ஸ்அப் மூலம் ஒளிப்படங்கள் (photos) மற்றும் காணொளிகள் பகிரப்படுகின்றன, அதன் அடிப்படையில் வினாடி வினாக்கள் (Online Quiz) ஆன்லைனில் தினமும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு மூத்த விஷன் சென்டர் பணியாளர் 10 கேள்விகளை வடிவமைக்கின்றார். சரியான பதில்களுடன் அவற்றிற்கான விளக்கங்கள் மற்றும் கூடுதல் குறிப்பு இணைப்புகளும் ஆன்லைன் வினாடி வினாவில் உள்ளன. தற்போது 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கின்றனர். இந்த வாட்ஸ்அப் பயிற்சியில் முதல் கட்டமாக மதுரை மற்றும் பாண்டிச்சேரி விஷன் சென்டர் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அனைத்து விஷன் சென்டர் பணியாளர்களையும் இந்தப் பயிற்சியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாண்டிச்சேரி அரவிந்திலேயே தயாரிக்கப்படும் முகக் கவசங்கள்

கொரானா வைரஸால் நெருக்கடி அதிகமாகும் அதே வேளையில் புதுமையான அணுகுமுறைகளைக் கண்டறியும் வாய்ப்புகளும் பாண்டிச்சேரி அரவிந்தில் உருவாகின்றன. Do-it-yourself எனும் நமக்கு நாமே செய்துகொள்ளும் முறையில் முகக் கவசத்தை (face mask) உருவாக்கி நோயாளிகளைக் கையாளும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஊரடங்கு காலத்தில் பொருட்களை வெளியிலிருந்து வாங்கும் வசதி இல்லாததால் இந்த நமக்கு நாமே முயற்சியால் உரிய பலன் கிடைக்கிறது.
(வீடியோவைப் பார்க்க….)

இடைநில்லா ஆய்வுகள்

அரவிந்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு செயல்பாடுகளின் நிலை குறித்து AMRF விஞ்ஞானிகள் தொடர்ச்சியாகத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர். காலத்தின் தேவை கருதி, கொரோனா பெருந்தொற்று பற்றி ஆராய்வதற்காக அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திர பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு ஆய்வுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா வைரஸின் தாக்கம் எனும் தலைப்பில் ‘கலைஞர் செய்திகள்’ நடத்திய தொலைக்காட்சி கலந்துரையாடலில் Dr. பரணிதரன் பங்கேற்றுள்ளார்.

(வீடியோவைப் பார்க்க..)

வழக்கமான பணி நாட்களில் திட்டமிடப்பட்ட ஆய்வு செயல்பாடுகள், கூட்டங்கள் என தொடர் பணிகளில்  ஈடுபட்டிருந்த பல விஞ்ஞானிகளுக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ஆய்வுக் கட்டுரைகளை முனைப்புடன் எழுதும் வாய்ப்பை இந்த ஊரடங்கு காலம் வழங்கியுள்ளது. ஆய்வகங்களுக்குள் பெரும்பாலான ஆராய்ச்சி செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு ஆய்வு உபகரணங்களும் சாதனங்களும் இயக்கப்படவில்லை. முறையான பராமரிப்பில் உபகரணங்களும் சாதனங்களும் உள்ளனவா என்பதை சரிபார்க்க, சுழற்சி முறையில் ஆய்வகப் பணியாளர்கள் ஆய்வகத்திற்கு செல்கின்றனர். ஆய்வுகளை மேற்கொள்ள நேரமோ இடமோ தடையாக இருப்பதில்லை. மெய்நிகர் சந்திப்புகள் (virtual meetings), தொலைபேசி உரையாடல்கள், சில நேரங்களில் நேரிடையாகச் சந்தித்தும் தங்கள் ஆய்வு நடவடிக்கைகளில் AMRF இன் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

அன்பின் வழியது உயிர்நிலை...

சீன மருத்துவரான Dr. ஹா, அரவிந்த் திருநெல்வேலியில் கண்புரை மற்றும் கண்நீர் அழுத்த சிறப்பு பிரிவுகளில் பயிற்சி பெற்றுள்ளார். அரவிந்த் குடும்பத்திற்கு சிறந்த நண்பராகவும் எப்போதும் அரவிந்தின் பணி குறித்து பிறருடன் ஆச்சர்யத்துடன் பேசுபவருமான Dr. ஹா, அரவிந்தில் பயிற்சி பெற்ற சீன கண் மருத்துவர்களை சமீபத்தில் தொடர்புகொண்டு 36,000 யுவானை நன்கொடையாகத் திரட்டியுள்ளனர். அரவிந்தில் பயிற்சி பெற்றுள்ள தங்கள் அனைவருக்கும் அரவிந்திற்கு தற்போது உதவுவது கடமையாகவும் பெருமையாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தொகை மூலம் 200 பாதுகாப்பு கண்ணாடிகளையும் 2000 பாதுகாப்பு முகக் கவசங்களையும் வாங்கி, அரவிந்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

சீனாவில் உள்ள அரவிந்தின் முன்னாள் மாணவர்களுக்கு நன்றி. தக்க தருணத்தில் நீங்கள் உதவுவதால் மகிழ்ச்சியடைகிறோம்.

மீண்டும் துளிர்த்தெழுவோம்

கண் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலகப் பணியாளர்கள், இல்லப் பராமரிப்புத் துறையினர், ஓட்டுநர்கள், மருத்துவமனை காவலர்கள், சமையல் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என நம் அரவிந்தின் ஒவ்வொரு பணியாளரும் அரவிந்தின் நன்மதிப்பிற்கும் பாரம்பரியத்தையும் நிலைநிறுத்தும் வகையில் இதுபோன்ற தருணங்களிலும் அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் தங்கள் கடமைகளைச் செய்வதைக் குறித்து நாம் பெருமிதம் கொள்வோம். சமீப காலமாக, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சமையல் பணியாளர்களின் பணிகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. அவர்களின் அர்ப்பணிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த ஊரடங்கு காலம், பொதுமக்களை வீட்டிலேயே வைத்திருந்தாலும் நம்மிடம் உள்ள சிறப்பானவற்றை வெளியில் கொண்டு வந்துள்ளது.