நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பங்கள், விழித்திரை எனும் மெல்லிய திசுவில் சரியாகக் குவிந்தால் நம்மால் பொருட்களை சரியாகப் பார்க்க முடியும். Refractive errors எனும் பார்வை குறைபாடு உள்ள கண்களில் விழித்திரையில் ஒளி சரியாகக் குவியாது. இதனால் பொருட்கள் மங்கலாகத் தெரியும். இதனைத் தவிர்க்க, கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிய வேண்டும். கண்ணாடியில் உள்ள லென்ஸ் வழியாக ஒளியானது விழித்திரையில் சரியாகக் குவியும். பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
கிட்டப் பார்வை (Myopia)
கிட்டப் பார்வை எனும் பார்வை குறைபாட்டில் அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும். ஆனால், தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும். இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும். நடுவில் மெல்லியதாகவும் ஓரங்களில் தடிமனாகவும் உள்ள குழி லென்ஸ் எனப்படும் கான்கேவ் (concave) லென்ஸை கண் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இதனை கண்ணாடியில் பொருத்தி அணிவதால் கிட்டப் பார்வை குறைபாடு நீங்கும்.
தூரப் பார்வை (Hyperopia)
தூரப் பார்வை எனும் குறைபாட்டில் தூரத்தில் மற்றும் அருகில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும். இந்தக் குறைபாடு உள்ள கண்களில் விழித்திரையைத் தாண்டி அதன் பின்னால் குவியும். இதற்கு நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் உள்ள குவி லென்ஸ் எனப்படும் கான்வெக்ஸ் (convex) லென்ஸ் அணிய வேண்டும்.
சமச்சீரற்ற பார்வை (Astigmatism)
இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளி சரியாகக் குவியாது. கருவிழி வளைவு ஆரங்களில் மாற்றங்கள் இருந்தால் சமச்சீரற்ற பார்வை உண்டாகும். உருளை வடிவ லென்ஸ் அணிவதன் மூலம் இந்தக் குறைபாட்டைத் தவிர்க்கலாம்.
வெள்ளெழுத்து (Presbyopia)
பொதுவாக, வயதாகும் பெரும்பாலானோருக்கு ஏற்படும் குறைபாடு இது. உங்கள் கண் லென்ஸ் நாளடைவில் அதன் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் இயல்பை இழந்துவிடும். ஒளியைப் பார்க்கும்போது விழித்திரையில் சரியாக கவனம் குவியாது. எனவே அருகில் உள்ள பொருட்கள், மங்கலாகத் தெரியும்.
அபாயக் காரணிகள்:
எந்த வயதிலும் கிட்டப் பார்வை, தூரப் பார்வை மற்றும் சமச்சீரற்ற பார்வை ஏற்படலாம். வயதாகும்போது வெள்ளெழுத்து (Presbyopia) குறைபாடு தோன்றும். 40 வயதைக் கடந்தவர்களுக்கு வெள்ளெழுத்து குறைபாடு தோன்றும். குடும்பத்தில் யாருக்கேனும் கிட்டப் பார்வை இருந்தால், மற்றவர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பொதுவான அறிகுறி யாதெனில், பார்க்கும் பொருட்கள் மங்கலாகத் தெரிவதுதான். பிற அறிகுறிகள்:
- இரட்டைப் பார்வை
- படிக்கும்போது சிரமம்
- ஒளி விளக்குகளைச் சுற்றி வளையங்கள் தெரிவது
- தெளிவாகப் பார்க்க, கண்களைச் சுருக்குதல் அல்லது தேய்த்தல்
- தலைவலி, கண் எரிச்சல்
மூன்று வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. கண்ணாடி அணிதல், காண்டாக்ட் லென்ஸ் மற்றும் லேசிக் அறுவை சிகிச்சை. எந்த சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்தாலும் மறுபரிசோதனை அவசியம்.
நினைவில் கொள்ள வேண்டியவை:
- மருத்துவர் பரிந்துரைத்தபடி கண்ணாடியை அணியவும்.
- வைட்டமின் A அதிகம் உள்ள உணவுகள், கண் நலனுக்கு ஏற்றவைதான். ஆனால் அவை மட்டும் தீர்வல்ல.
- உங்கள் கண்களின் பார்வையை கண்ணாடி மேம்படுத்தவோ குறைக்கவோ செய்யாது. உங்கள் தற்போதைய பார்வைத் திறன் மூலம் நீங்கள் பார்க்கும் பொருட்களைத் தெளிவாகக் காண, கண்ணாடி உதவும்.
கண்ணாடி, காண்டாக்ட் லென்ஸ் – எது சிறந்தது?
15 வயதைக் கடந்தவர்கள் காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் – இரண்டில் ஒன்றை உங்கள் கண் நலன் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் தினசரி பயன்பாட்டைப் பொறுத்து தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும்.
கண்ணாடி:
- தூசி, புகை ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.
- கண்ணாடிக்கு குறைவான பராமரிப்பே போதும்.
- நீண்டகால பயன்பாட்டிற்கு கண்ணாடி, மலிவானது.
- பல வடிவங்களில், அளவுகளில் மற்றும் தோற்றங்களில் கண்ணாடிகள் உள்ளன.
- Refractive errors எனும் பார்வை குறைபாடு உள்ள அனைவரும் கண்ணாடி அணியலாம்.
- கண்ணாடி அணிவதால் கண்களை அடிக்கடி தொடுவதோ தேய்ப்பதோ தடைபடும். இதனால் நோய்த் தொற்றைத் தவிர்க்கலாம்.
காண்டாக்ட் லென்ஸ்:
- உங்கள் கண் அளவிற்கு லென்ஸ் இருக்கும். இதனால் தடங்கல் இல்லாத பரந்த பார்வை கிடைக்கும்.
- உடற்பயிற்சியின்போதும் விளையாட்டின்போதும் இதை அணிந்தபடி இருக்கலாம்.
- வானிலையால் காண்டாக்ட் லென்ஸ் பாதிக்கப்படாது. மூடுபனியால் மறைக்கப்படாது.
- காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பதைப் பிறரால் எளிதாகக் கவனிக்க முடியாது.