அறிமுகம்:
பாதிக்கப்பட்ட கருவிழியை அகற்றி ஆரோக்கியமான, நன்கொடையாகப் பெறப்பட்ட கருவிழியைப் பொருத்தும் அறுவை சிகிச்சையே மருத்துவ உலகில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை எனப்படுகிறது. சில அறுவை சிகிச்சைகளில் முழு கருவிழியும் அகற்றப்படும் அல்லது சில பாகங்கள் மட்டுமே அகற்றப்படும். சிக்கலான சில கருவிழி நோய்களைக் குணப்படுத்த இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நோய்த் தொற்றைக் குணப்படுத்தவும் பார்வையைப் பாதுகாக்கவும் இறுதி முயற்சியாக இந்த அறுவை சிகிச்சை முறை கையாளப்படுகிறது.
ஏன் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது?
- கெரடோகோனஸ் (கருவிழி துருத்திக்கொண்டிருத்தல்)
- கருவிழி நோய்த் தொற்று அல்லது காயங்கள்
- கருவிழி அல்சர் (கெரடிடிஸ்)
- கருவிழி வீக்கம் மற்றும் சிதைவு
போன்ற காரணங்களால் கருவிழி தீவிரமாகப் பாதிக்கப்படலாம்.
அறுவை சிகிச்சைப் பற்றி:
ஒரு மணி முதல் ஒன்றரை மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை முடிந்துவிடும். மயக்கமருந்து கொடுக்கப்படும். எனவே, நோயாளிகளுக்கு வலி தெரியாது.
- பாதிக்கப்பட்ட கருவிழி வளையம் கண்ணிலிருந்து அகற்றப்படும்.
- ஆரோக்கியமான, நன்கொடையாகப் பெறப்பட்ட கருவிழி பொருத்தப்படும்.
- கருவிழியைச் சரியாகப் பொருத்த, தையல் போடப்படும்.
கருவிழி மாற்று அறுவை சிகிச்சை வகைகள்:
முழு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை:
- தெரபெடிக் கெரடோபிலாஸ்டி (Therapeutic Keratoplasty): கார்னியல் அல்சர் நோயாளிகளுக்கு.
- பெனடிரெட்டிங் கெரடோபிலாஸ்டி (Penetrating Keratoplasty): கெரடோகோனஸ், கண் துருத்தல் மற்றும் கண்ணில் தழும்பு கொண்ட நோயாளிகளுக்கு..
பகுதி கருவிழி மாற்று அறுவை சிகிச்சை:
- DMEK/DSAEK – Pseudophakic Bullous Keratopathy மற்றும் Fuchs endothelial dystrophy நோயாளிகளுக்கு
- DALK – கூம்பு வடிவக் கருவிழி மற்றும் கருவிழியின் சில அடுக்குகளில் மற்றும் தழும்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு
பாதிப்புகள்:
- கண்ணில் தொற்று பாதிப்பு
- கண் நீர் அழுத்தம்
- கண்ணில் போடப்பட்ட தையல்களினால் பாதிப்பு
- கருவிழி நிராகரிப்பு
போன்ற சில பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கருவிழி நிராகரிப்பு:
நன்கொடையாகப் பெறப்பட்ட கருவிழி திசுக்களை நோயாளியின் உடல் திசுக்கள் தாக்கும்போது நிராகரித்தல் நிகழும். கண் சிவப்பாக இருத்தல், வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுதல், பார்க்கும்போது மேகமூட்டம் போல உணர்தல், கண் வலி உள்ளிட்டவை நிராகரிப்பின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தோன்றினால் கண் மருத்துவரை உடன் அணுகவும். ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் ஸ்டிராய்டு கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தி குணப்படுத்தலாம்.
அறுவை சிகிச்சைக்கு தயாராகுதல்:
அறுவை சிகிச்சைக்கு முன்:
- அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா, உங்களுக்கு பொருந்துமா என அறிய கண் மருத்துவரிடம் கண் பரிசோதனை மேற்கொள்ளவும்.
- நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றியும் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகள் பற்றியும் விரிவாக மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு:
- மருத்துவர் மற்றும் ஆலோசகர்களின் அறிவுரைகளைக் கவனமாகப் பின்பற்றவும். பரிந்துரைக்கப்பட்டபடி கண் சொட்டு மருந்துகளை அல்லது மருந்துகளைப் பயன்படுத்தவும்.
- கண்கள் அடிபடாமல் பார்த்துக் கொள்ளவும்.
- கண் மருத்துவர் குறிப்பிடும் நாட்களில் மறு பரிசோதனைக்கு தவறாமல் செல்லவும்.
- அசுத்தமான ஆறு, குளங்களில் குளிப்பதைத் தவிர்க்கவும்.
விளைவுகள்:
கருவிழி எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே அறுவை சிகிச்சைக்கு பிறகான விளைவுகள் இருக்கும். அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெரும்பான்மையான மக்களுக்கு பார்வையில் சிறிதளவேனும் முன்னேற்றம் இருக்கும். சரியான முறையில் கண்கள் குணமடைகிறதா என்பதை அறிய கண் மருத்துவர் குறிப்பிடும் நாட்களில் தவறாமல் மறுபரிசோதனைக்கு செல்லவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
ஏன் எனக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும்?
உங்கள் கண்களின் மேற்பகுதியில் இருக்கும் தெளிவான பகுதியே கருவிழி. உங்கள் கருவிழி, தெளிவாக இல்லாமல் மேகமூட்டம் போல மறைக்கப்பட்டிருந்தால் பார்வை இழப்பு ஏற்படலாம். வேறு சில நோய்கள், நோய்த் தொற்று மற்றும் அடிபடுதல் போன்ற காரணங்களால் உங்கள் கருவிழி பாதிக்கப்படலாம். நன்கொடையாகப் பெறப்படும் தெளிவான கருவிழியைப் பொருத்தி இந்தச் சிக்கலைக் களையலாம்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு எனக்கு ஏதேனும் வலி அல்லது எரிச்சல் இருக்குமா? பக்க விளைவுகள் நீங்க எத்தனை நாட்கள் ஆகும்?
அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெகு சில நாட்களுக்கு மட்டுமே சிறிதளவு வலியே இருக்கும். வலியைக் கட்டுப்படுத்த வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்ள நேரிடும். வெகு சில நோயாளிகளுக்கு தையல்கள் சேதமடையலாம். இதனால் கண்களில் எரிச்சல் இருக்கும். இதற்கு தீர்வு, தையல்களை மாற்றுவதுதான்.
கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு எத்தனை நாட்கள் நான் மருத்துவமனையில் இருக்க வேண்டும்?
அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று நாட்களுக்கு மருத்துவவமனையில் தங்கியிருக்க வேண்டும். சிலருக்கு மருத்துவமனையில் தங்கவேண்டிய நாட்கள் அதிகரிக்கலாம்.
எனது பார்வை தெளிவாக எத்தனை நாட்கள் ஆகும்?
அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதங்களில் உங்கள் பார்வை சீரடையும். கண்ணாடி அணியும்படி மருத்துவர் அறிவுறுத்தியிருந்தால் பார்வை மேம்பட, கண்டிப்பாக கண்ணாடி அணிய வேண்டும்.
எத்தனை மாதங்களுக்கு நான் மருந்து எடுத்துகொள்ள வேண்டும்?
குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சொட்டு மருந்து உபயோக்கிக்க வேண்டும். உங்கள் உடல்நிலை மற்றும் மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப கூடுதலாக சில மாதங்கள் வரை மருந்துகளைத் தொடர வேண்டியிருக்கும்
மறு பரிசோதனைக்கு எப்போது நான் வர வேண்டும்?
ஒரு மாதம், மூன்று மாதங்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கு பிறகு கண் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். சில நேரங்களில் உங்கள் கண்களின் நிலையைப் பொறுத்து அடிக்கடி கூட வர சொல்லலாம்.
கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு எப்போது தலை குளிக்க வேண்டும்?
பொதுவாக
, ஒரு மாதத்திற்கு பிறகு குளிக்கலாம். இருப்பினும்
, உங்கள் காயம் ஆறிவிட்டதா என உங்கள் கண் மருத்துவர் உறுதிசெய்யும்வரை காத்திருக்கவும். குளம் மற்றும் ஆற்றுநீரில் குளிப்பதைத் தவிர்க்கவும்.
Back to English Version