அறிமுகம்:
கண் சதை என்பது பிங்க் நிறத்தில், முக்கோண வடிவத்தில் கருவிழிப் பகுதியில் வளரும் திசு. கண்ணின் உள் ஓரத்தில் வளரும் கண் சதையானது கண்ணின் நடுப்பகுதியை நோக்கி நீண்டுச் செல்லும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மெல்ல வளர்ந்தபடியே இருக்கும். சிலருக்கு ஓரளவு வளர்ந்து பிறகு நின்று விடும். வெகு சிலருக்கு கருவிழி பாப்பாவை மறைத்தபடி வளர்ந்து, பார்வையைப் பாதிக்கும்.
அபாயக் காரணிகள்:
கண் சதை தோன்றுவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அதிகமாக சூரிய ஒளி, மணல், காற்று இருக்கும் இடங்களில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு கண் சதை உண்டாகும் அபாயம் அதிகம். பொதுவாக, 20-40 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு உண்டாகும். இதைத் தவிர்க்க, நேரடி சூரிய ஒளியில் நீண்டநேரம் இருக்க நேரிட்டால் கருப்பு கண்ணாடி அல்லது தொப்பி அணியவும்.
சிகிச்சை:
கண் சதையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். கண் சதை வளர்ச்சியால் பார்வை தடைபட்டாலோ, தொடர்ந்து தொந்தரவாக இருந்தாலோ அல்லது சதையின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்தாலோ அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். கண்ணில் வளர்ந்துள்ள சதை கண் பாப்பாவை மறைக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டாலோ புகை, தூசி போன்றவை கண்ணில் படும்போது கண் எரிச்சலை ஏற்படுத்தலாம் அல்லது பார்வைக் குறைபாட்டை உண்டாக்கலாம். முக அழகிற்காகவும் கண் சதை அகற்றப்படுகிறது. பெரும்பாலும் இந்த காரணத்தை வைத்து மட்டுமே கண் சதையை அகற்றப் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் சில நோயாளிகளுக்கு மீண்டும் கண்ணில் சதை வளரக்கூடும். கண்ணில் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்க சொட்டு மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். இந்த சொட்டு மருந்துகள் அறிகுறிகளைக் குறைக்க மட்டுமே. அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தரத் தீர்வு.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. மருந்துகள் மூலம் கண் சதையை குணப்படுத்த முடியுமா?
இல்லை. அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அகற்றமுடியும்.
2. அறுவை சிகிச்சைக்கு பிறகு எத்தனை நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும்?
ஒரே ஒருநாள் மட்டுமே தங்கினால் போதும்.
3. அறுவை சிகிச்சைக்கு பிறகு கண் சதையை மறைக்க முடியுமா?
Conjunctival Autograft எனும் சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் கண் சதை மீண்டும் வளரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
4. அறுவை சிகிச்சைக்கு பிறகு எத்தனை நாட்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்?
மூன்று வாரங்களுக்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. மறுபரிசோதனைக்கு எப்போது வரவேண்டும்?
மூன்று வாரங்களுக்கு பிறகு வரவேண்டும்
6. அறுவை சிகிச்சைக்கு பிறகு முழுப் பார்வை கிடைக்குமா?
கண் சதை அகற்றும் அறுவை சிகிச்சையானது பார்வையை மேம்படுத்த செய்யப்படுபவை அல்ல. கண் சதையால் கருவிழி பாப்பா முற்றிலும் மறைக்கப்பட்டு பார்வையிழப்பு ஏற்படுவதிலிருந்து தடுக்கவே இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. Back to English Version