கண்ணீர் ஒரு விளக்கம்

கண்களிலுள்ள கண்ணீர் சுரப்பிகள் கண்ணீரைச் சுரக்கின்றன. இக்கண்ணீர் நுண்ணிய நரம்புகள் வழியாகக் கண்ணீருக்கும் கண் இமைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை சென்றடைகிறது. இதன் முக்கிய வேலை, கண்களைச் சுத்தமாகவும் உலர்ந்துவிடாமலும் ஈரப்பதத்துடனும் பளபளப்பாக வைப்பதேயாகும், கண்ணீரில் லைசோசெம் என்ற கிருமி நாசினி இருக்கிறது. இது, கண்களைத் தாக்கும் சிலவகைக் கிருமிகளிடமிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.

கண்ணீர்ப் பாதை அடைப்பு

கண்ணீர்ப் பாதையில் அடைப்பு ஏற்பட்டால் கண்ணீர் வெளியேற முடியாமல் கண்களின் ஓரத்தில் தேங்கத் தொடங்கிவிடும், பிறந்த குழந்தைகளுக்கு இந்தச் சிக்கல் பொதுவாக ஏற்பட்டாலும் இளம் வயதினருக்கும் 70 வயதைக் கடந்தவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படும்.

அறிகுறிகள்

  • கண்களில் இருந்து கண்ணீர் அதிகளவில் வெளியேறுதல் அல்லது நீர் வடிதல்
  • கண்ணின் உள் ஓரத்தில் வீக்கம் ஏற்படுதல். இந்த இடத்தில்தான் கண்ணீர்ப் பாதை உள்ளது.
  • வீக்கம்
  • கண் சிவப்பாகுதல்
  • கண்களில் பீளை வடிதல்

சிகிச்சை

கண்ணீர்ப் பாதை அடைப்புக்கு முறையான சிகிச்சை அவசியம் என்பதை உணர வேண்டும். உங்களுக்கு வேறு ஏதேனும் கண் குறைபாடுகள் இருந்தால் கண்ணீர்ப் பாதை அடைப்பானது அதிக சிக்கல்களை உருவாக்கலாம். கண்ணீர்ப் பாதை அடைப்புக்கான சிகிச்சையின் மூலம் இந்தக் குறைபாட்டைக் குணப்படுத்தலாம்.

ஒவ்வாமையைத் தடுக்கும் மருத்துவம்

  • குழந்தைகளுக்கான சிறப்பு மசாஜ் முறைகள்
  • குழந்தைகளுக்கு கண்ணீர்ப் பாதை அடைப்பு ஏற்பட்டிருந்தால் மெல்லிய குச்சி மூலம் அடைப்பைத் திறந்து விட Probe எனப்படும் சிறிய அறுவை சிகிச்சை செய்தல்
  • மூக்கின் வழியாக நீரை வெளியேற்றும் குழாய்கள் பொருத்துதல்

குழந்தைகளுக்கான சிகிச்சை அறுவை சிகிச்சையல்லாத (Medical) முறை

  • கண்ணீர்ப்பை உள்ள இடத்தை அழுத்தி ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு வேளை தேய்த்து (Massage) பீளையை அகற்றிவிட வேண்டும். இதன் மூலம் இவ்வடைப்பு சரியாவதற்கு வாய்ப்பு உள்ளது. இச்சிகிச்சை முறை, குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை பயனளிக்கும்.
  • கண்ணில் சிவப்பு, பீளை கட்டுதல் ஆகியவை இருந்தால் கண் சொட்டு மருந்து (Antibiotic) பயன்படுத்தலாம்.
  • கண்ணீர்ப் பாதையில் சிலிக்கானால் ஆன குழாயைச் செலுத்தி ஒரு சிலவாரங்கள் வைத்திருந்தால் அடைப்புச் சரியாகும்.

குழந்தைகளுக்கான சிகிச்சை அறுவை சிகிச்சை (Surgical) முறை

  • மேற்குறிப்பிட்டபடி மருந்து மற்றும் தேய்த்தல் முறையும் (Massage) பயனளிக்காவிட்டால் புரோபிங் (Probing) என்னும் அறுவை சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. இம்முறையில் மயக்க மருந்து கொடுத்து Probe எனப்படும் ஒரு மெல்லிய கருவியை கண்ணீர்ப்பையையும் மூக்கையும் இணைக்கும் குழாய்க்குள் செலுத்தி அடைப்பை அகற்றி குணப்படுத்தலாம், 80 சதவீதம் குழந்தைகளுக்கு இந்த சிறிய அறுவை சிகிச்சை நன்கு பலனளிக்கிறது.
  • கண்ணீர்ப்பாதை அடைப்பினால் அவதியுறும் குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை எவ்வித சிகிச்சையும் மேற்கொள்ளாவிட்டால் மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் பலனளிக்காது. நான்கு முதல் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மூக்கு எலும்பு நன்றாக வளர்ச்சியடையும்போது DCR என்ற அறுவை சிகிச்சை மூலமும் சரி செய்யப்படுகிறது.

பெரியவர்களுக்கான சிகிச்சை முறை

பெரியவர்களுக்கும் 4 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் DACRYOCYSTORHINOSTOMY (DCR) அறுவை சிகிச்சை சிறந்தது.இதில் கண்ணீர்பைக்கும் மூக்குக்கும் இடையில் உள்ள சிறு மூக்கு எலும்பை உடைத்து ஒரு புதிய பாதை உருவாக்கப்படும். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்ணில் நீர்வடிவதோ பீளை கட்டுதலோ இருக்காது. மிகவும் வயதானவர்களுக்கும் மூக்கில் வேறு ஏதேனும் பிரச்சனை இருப்பவர்களுக்கும் நீர்ப்பையை முழுவதும் அகற்றும் DACRYOCYSTORHINOSTOMY (DCR) எனும் அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்ணில் பீளை கட்டுதல் இருக்காது. ஆனால் நீர் வடிதல் இருக்கும். இந்த இரு அறுவைசிகிச்சைகளுமே கண்ணிற்கும் மூக்கிற்கும் இடையில் தோலின் மீது சிறிய துவாரம் மூலமாக செய்யப்படும். காலப்போக்கில் இந்தத் தழும்பு மறைந்து விடும்.

லேசர் DCR (Laser)

இது, புதிய முறை. அடைக்கப்பட்ட கண்ணீர்ப் பாதைக்குள் மிக மெல்லிய குழாய் நுழைக்கப்படும். கண்ணீர்ப் பாதையையும் மூக்கையும் இணைக்கும் எலும்பு வரை இந்த மெல்லிய குழாய் செல்லும். இந்தக் குழாய் வழியாக மிக மெல்லிய ஒயர் செல்லும். எலும்பை ஒயர் அடைந்ததும், . லேசர் சிகிச்சை தொடங்கப்படும். இந்த லேசர், எலும்பைத் துளைத்துக் கண்ணீர்ப் பாதைக்கான புதிய வழிகாய உருவாக்கும்.
  • மிகச் சில நிமிடங்களே அறுவை சிகிச்சை நீடிக்கும்
  • அறுவை சிகிச்சைக்குப் பின் தையல் இருக்காது. எனவே தழும்போ. வெளிப்புறத்தில் காயமோ இருக்காது.
  • மூக்கின் அருகே சிறிய பைகள் பொருத்தப்பட மாட்டாது.
  • இந்தப் புதிய முறையில் சிறப்பான முடிவுகள் எப்போதும் கிடைப்பதில்லை.
  • மயக்க மருந்து கிரீம் தடவப்படும். விழித்த நிலையில் இருப்பீர்கள். ஆனால் வலியை உணர மாட்டார்கள்
  • இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
Back to English version