அறிமுகம்:
இந்தக் குறைபாடு காரணமாக, கண்ணின் முன்பகுதியான கருவிழியானது மெலிந்து, கூம்பு வடிவத்தில் துருத்திக் கொண்டு இருக்கும். இரு கண்களையும் பாதிக்கக்கூடிய இந்த குறைபாடு, ஆரம்ப நிலையில் தீவிரமாக இருக்காது. ஆனால் நாளடைவில் பார்வையைப் பாதிக்கும். பிறந்ததிலிருந்து முதல் 20 வருடங்கள் வரைதான் அதாவது உடல் வளர்ச்சி பெறும்போது இந்த குறைபாடு வெளியில் தெரியும். எனவே, 20 வயதிற்குள் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். தொடர் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் பார்வையைப் பாதுகாக்கலாம்.
காரணங்கள்:
கூம்பு வடிவ கருவிழிக்கு சரியான காரணம், இன்னும் கண்டறியப்படவில்லை.
அபாயக் காரணிகள்:
- பரம்பரைக் காரணி
- கண்களை அடிக்கடி தேய்த்தல்,
- பார்வைத் திறன் குறைபாடு (Refractive Error)
- VKH எனும் ஒருவித ஒவ்வாமை
- மாலைக் கண், Down syndrome, தூசியால் வரும் காய்ச்சல் (Hay fever) மற்றும் ஆஸ்துமா
அறிகுறிகள்:
- மங்கலான பார்வை
- வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுதல்
- கண்ணாடியின் பவரை அடிக்கடி மாற்றும் தேவை
- கருவிழி வீக்கமடைதல்.
வீக்கமடைவதால் கிட்டப் பார்வை மற்றும் சமச்சீரற்ற பார்வை (astigmatism) உண்டாகும். கண் தசையில் தழும்பு உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
சிகிச்சை:
இக்குறைபாடு ஆரம்ப நிலைகளில் இருக்கும்போது கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்படுகிறது. குறைபாடு தீவிரமடைந்த நிலையில், நோயாளிகளுக்கு பொருந்தும் வகையில் பிரத்யேக காண்டாக்ட் லென்ஸ் பரிந்துரைக்கப்படும். இதனால் பார்வை மேம்படும்.
கண்களை முறையாக தொடர் பரிசோதனை செய்துகொண்டால் கருவிழியானது கூம்பு வடிவில் வளர்வதைக் கண்டறியமுடியும். சிக்கல், தீவிரமடையும்முன் C3-R எனப்படும் அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களின் சதவீதம் மிகவும் குறைவு. C3-R எனப்படும் புதிய வகை, துளையிடாத அறுவை சிகிச்சை மூலம் கருவிழியின் பலம் அதிகரிக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை மூலம் ஏற்கனேவே உள்ள வீக்கத்தைக் குறைக்க முடியாது. ஆனால் மேலும் மோசமடையாமல் தடுக்க உதவும்.
கண்ணில் காண்டாக்ட் லென்ஸ் சரியாக பொருந்தாமல் இருப்பவர்களுக்கு, கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிந்தும் தெளிவான பார்வை கிடைக்காதவர்களுக்கு கருவிழி அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
Back to English Version