ஆரோக்கியமான கண்களுக்குள் ஒளியானது தெளிவான லென்ஸ் வழியாக செல்லும். கண்புரை நோயாளி கண்களில் உள்ள லென்ஸ் வழியாக ஒளி சரியாக ஊடுருவாது. இதனால் மங்கலான பார்வை உண்டாகும்.

காரணங்கள் மற்றும் அபாயக் காரணிகள்:

கண் லென்ஸில் மாற்றம் ஏற்பட்டால் கண்புரை ஏற்படும். சில காரணங்களால் கண்புரை உண்டாவதற்கான அபாயம் அதிகம். அவை:

  • அதிகரிக்கும் வயது
  • கண் நீர் அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் கண்ணில் அடிபடுதல்
  • ஸ்டிராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துதல்
  • கண் காயங்கள்
  • நேரடி சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் பணிபுரிபவர்கள்

உங்களுக்கு வயதாகும்போது உங்கள் கண்களுக்கும் வயதாகும். இதனாலும் கண்புரை உருவாகும். வயதானவர்களுக்கு கண்புரை வருவது இயல்பானதுதான். 45 வயதைக் கடந்தவர்களுக்கு கண்புரை ஏற்படுவது இயல்புதான் என்றாலும் சில குழந்தைகளுக்கும் கண்புரை ஏற்படும். நம்பிக்கையான அம்சம் யாதெனில் பெரியவர்கள், குழந்தைகள் என யாருக்கு கண்புரை வந்தாலும் அவற்றை குணப்படுத்த முடியும்.

கண்புரை அறுவை சிகிச்சைக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிய, இங்கே கிளிக் செய்யவும்
  • மங்கலான பார்வை
  • ஒளியைப் பார்க்கும்போது கண் கூசுதல்
  • இரட்டைப் பார்வை
  • கண்ணின் பாப்பா வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இருத்தல்
  • வண்ணங்களைப் பார்க்கும்போது மங்கலாகத் தெரிவது அல்லது தெளிவில்லாமல் தெரிவது

பாதுகாப்பான, சிறப்பான அறுவை சிகிச்சை மூலம் கண்புரை அகற்றப்படும். அறுவை சிகிச்சையின்போது புரையுள்ள லென்ஸ் அகற்றப்பட்டு, ஒளிபுகும் தன்மையுள்ள, செயற்கையான லென்ஸ் கண்ணில் பொருத்தப்படும். இதனால் பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். கண்புரைக்கு அறுவை சிகிச்சை மட்டும்தான் முழுமையான தீர்வு.

கண்ணில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பின்னர் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்படும். எனவே கண்ணில் வலியை உணர மாட்டீர்கள். உங்கள் வயது, நோயின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து சாதனம் (machine) மூலம் அறுவை சிகிச்சை செய்யலாமா அல்லது கைமுறையாக (Manually) அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதை கண்புரைக்கான சிறப்பு மருத்துவர் முடிவெடுப்பார். சாதனம் (machine) மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு ‘PHACO’ என்று பெயர். அதிநவீன லேசர் முறையில் கண்புரையை அகற்றலாம்.

ஏன் எனக்கு கண்புரை அறுவை சிகிச்சை தேவை?

உங்களுக்கு கண் புரை இருந்தால் உங்களது இயற்கையான கண் லென்ஸ், மேகம் மறைத்தது போல இருக்கும். லென்ஸின் வழியாக ஒளி சரியாக ஊடுருவாது. கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் புரை உள்ள லென்ஸ் நீக்கப்பட்டு, ஒளிபுகும் தன்மையுள்ள IOL லென்ஸ் (Intra Ocular Lens) பொருத்தப்படும். மிகப் பெரும்பாலானவர்களுக்கு தெளிவான பார்வையை மீண்டும் பெற அறுவை சிகிச்சை உதவுகிறது. அறுவை சிகிச்சை மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

கண்புரை ஆரம்ப நிலையில் இருக்கும்போது கண்ணாடி அணியலாம். அறுவை சிகிச்சை செய்வதைத் தள்ளிப்போடலாம். அடிக்கடி கண்ணாடி மாற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். கண்ணாடி என்பது நிரந்தர தீர்வல்ல. கண்புரையால் உங்கள் தினசரி வாழ்க்கை தடைபடும்போது அறுவை சிகிச்சை தேவை என்பதை உணரவும். உங்கள் பார்வையை அறுவை சிகிச்சை மேம்படுத்தும். உங்களால் வாகனம் ஓட்ட முடியும். படிக்க முடியும், சமைக்க முடியும். கண்புரைக்கு பிறகான முன்னேற்றம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறும்.

IOL லென்ஸ் (Intra Ocular Lens):

கண்புரை அறுவை சிகிச்சையின்போது IOL லென்ஸ் பொருத்தப்படும். காண்டாக்ட் லென்ஸ் போல அல்ல. IOL என்பது உங்கள் கண்களிலேயே எப்போதும் இருக்கும். பல வகையான லென்ஸ் உள்ளன. உங்களது உடல்நிலை, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு பொருத்தமான லென்ஸ் எது என்பதை மருத்துவர்களும் கவுன்சிலர்களும் தெரிவிப்பார்கள்.

அபாயங்கள் மற்றும் தொடர்புடைய சிக்கல்கள்:

சிக்கல்கள் மிக அரிதாக ஏற்படும். ஆனால் குணப்படுத்தக்கூடியவையே. நோயாளிக்கு வேறு ஏதேனும் கண் நோய்கள் இருந்தால் சிக்கல்கள் ஏற்படலாம். கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன் உங்களது மற்ற கண் நோய்களைப் பரிசோதித்து முடிந்தால் குணப்படுத்திக் கொள்வது நன்று.

அபாயங்கள்:
  • கண் வீக்கம்
  • நோய்த் தொற்று
  • இரத்தம் வடிதல்
  • பார்வையிழப்பு
அறுவை சிகிச்சையின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

மருத்துவர், உங்களுக்கு மருந்துகளும் சொட்டு மருந்துகளும் வழங்குவார். அறுவை சிகிச்சைக்கு முந்தைய தினம், அறுவை சிகிச்சை செய்யும் தினமன்று, அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாள் என சொட்டு மருந்து இட வேண்டும். எப்போது, எந்த நேரத்தில் சொட்டு மருந்து இட வேண்டும் என்பதை மருத்துவரோ கவுன்சிலரோ தெரிவிப்பார். உங்களுக்கு ஏதேனும் மருந்து பயன்படுத்தி ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டால் மருத்துவரிடம் தெரிவிக்கவும். வேறு ஏதேனும் மருந்துகளை கண்களில் இடக்கூடாது. மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றவும்.

மேம்படுதல்:

அறுவை சிகிச்சைக்கு பிறகு, உங்கள் பார்வை படிப்படியாக முன்னேற்றம் அடையும். முதலில் உங்கள் பார்வை மங்கலாகத் தெரியக்கூடும். சில நாட்களுக்கு அரிப்பு, கண் சிவப்பு, நீர் வடிதல் ஆகியவை ஏற்படலாம். இது, குணமடைதலின் ஒரு பகுதிதான். கவனமாகக் கண்களைப் பார்த்துக்கொண்டால் உங்கள் கண்கள் 8 வாரங்களுக்குள் முழுமையாக குணமடையும்.

வீடு திரும்பிய பிறகு, பின்வரும் பாதுகாப்பு அம்சங்களை முழுமையாகப் பின்பற்றவும்:
  • கண் கட்டை அகற்றி, கருப்பு கண்ணாடி/சாதாரண கண்ணாடி (Transparent Specs) அணியவும்.
  • கண் சொட்டு மருந்தைப் போடும் முன்பு, கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவவும்.
  • நச்சு நீக்கப்பட்ட பஞ்சை வைத்து கண்களைத் தினமும் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். பஞ்சில் உள்ள நச்சை நீக்க, கொதிக்கும் தண்ணீரில் பஞ்சைப் போட்டு அந்த நீர், அறை தட்ப வெப்பநிலைக்கு (Room Temperature) வரும்வரை காத்திருக்க வேண்டும்.
  • பயணம் செய்யும்போது கருப்பு கண்ணாடிகளை அணியவும்.
  • மருந்து போடும் முறைகளை கவனமாகப் பின்பற்றவும்.

அறுவை சிகிச்சை செய்து முதல் மாதம் நீங்கள் பின்பற்ற வேண்டியவை:

  • சூரிய ஒளி, புகை மற்றும் தூசி ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
  • புகையிலை மற்றும் குடிப்பழக்கத்தை நிறுத்தவும்.
  • கண் நீர் அழுத்த நோய் இருந்தால் அதற்கான மருந்துகளை முறையாக போடவும்.
  • சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் ஆகியவற்றைக் கண்காணித்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

Back to English Version