Paykwik

பரிவுடன் கூடிய சிகிச்சையும் கனிவுடன் கூடிய கவனிப்பும்

தமிழகத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் சென்னையில் உள்ளதால் அங்கு இன்னும் நிச்சயமற்ற சூழல் நீடிக்கிறது. நம் காலத்தின் மிகப்பெரும் சவாலை எவ்வாறு சென்னை-அரவிந்த் எதிர்கொள்கிறது என்பதை அறிந்துக் கொள்வோம்.

இந்தியாவும் உலகின் ஏனைய நாடுகளும் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வேளையில்சென்னை-அரவிந்தில் நோயாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்க, தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.  ஊரடங்கு4.0 தொடங்க உள்ள நிலையிலும், சென்னையில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. சமீபத்தில் கோயம்பேடு சந்தையிலிருந்து பலருக்கு நோய் பரவியது.  தமிழக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டோர் கோயம்பேடு பகுதியிலிருந்து நோய்த் தொற்று பெற்றவர்களாக உள்ளனர்.  அரவிந்த் கண் காப்பு மையக் குடும்பத்தின் அங்கத்தினராகநிலைமையை எதிர்கொள்ள, தொடர்ச்சியாக ஆலோசனைகளை நடத்துகிறோம்.  பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்கும்போது அவற்றைப் பற்றி விரிவாக கற்றுக்கொள்ளவும் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன.

புதிதாகத் திறக்கப்பட்ட மருத்துவமனையாக இருந்தாலும், நான்கு இலக்கங்களில் தினமும் நோயாளிகளைப் பரிசோதித்து பழகிவிட்டதால் எங்களால் இந்த நோய்த் தொற்றை மன உறுதியுடன் எதிர்கொள்ள முடிகிறது.  சுய பாதுகாப்பு மற்றும் கவனமுடன் சிகிச்சை அளித்தல் என பல புதிய அம்சங்களை இளம் செவிலியர்கள் மீண்டும் கற்கின்றனர்.  அனுபவம் உள்ள பணியாளர்கள் உறுதியையும் நட்புறவையும் பலப்படுத்துகின்றனர்.வழக்கமான பயிற்சி, கண்காணிப்பு மற்றும் தணிக்கைகள் என அனைத்தும் புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற ஊக்கமளிக்கின்றன.

வெளிநோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் புதிய நெறிமுறைகளை வகுக்கவும் பாதுகாப்பு அம்சங்களை விரிவாக ஏற்பாடு செய்யவும் போதிய கால அவகாசம் கிடைக்கிறது.  மருத்துவமனைக்கு வருபவர்களும் நிதானமாகக் காத்திருந்து, எங்களது உள்ளார்ந்த ஆர்வத்தைக் கண்டு வியக்கின்றனர்.  மருத்துவமனை, வீடு என இரண்டு இடங்களிலும் வெளிப்புற, உட்புற விளையாட்டுகள், கண்ணாடி ஓவியம், தோட்டக்கலை, பதாகை தயாரித்தல், கலைப்படைப்பு, சமையல், நடனம் மற்றும் இசை ஆகியவற்றில் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதால் கண் மருத்துவத்தைத் தாண்டியும் அவர்களுக்கு ஈடுபாடு இருப்பதை உணர முடிகிறது.

புதிதாக சவால்களும் உதித்தன.  பணியாளர்களில் இருவருக்கு அம்மை நோய் தாக்கியது. இந்த பணியாளர்களைத் தனிமைப்படுத்தி, சிகிச்சையளித்தோம். இதனை எச்சரிக்கையாகக் கொண்டு, பிற செவிலியர்கள், தங்கள் இடத்தை முழுவதுமாக சுத்தம் செய்து, நோய்த்தொற்று இல்லாமல் தூய்மைப்படுத்தினர். இதுவரை தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்மூலம் நோய்த்தொற்றின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.  பணியாளர்களில் 80 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் மருத்துவமனை வளாகத்திற்குள் தங்கியிருப்பதால் அவர்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.  ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களது ஊக்கமும் சக்தியும் குறையாமல் உள்ளன. இவை சிறப்பாக நடைபெற, மேலாளர்கள் மற்றும் மூத்த இல்லப் பராமரிப்புத் துறையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது. வெகு சில பணியாளர்களைக் கொண்டு சில துறைகள் இயங்குகின்றன. துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், தங்கள் வீடுகளிலிருந்து ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைக்கு பணிக்கு வர போக்குவரத்து வசதியை நிர்வாகம், ஏற்படுத்தியுள்ளது.

நோயாளிகளின் வருகையை ஒழுங்குப்படுத்துவதன் மூலமும் ஒத்திகைப் பயிற்சிகளில் (mock drills) ஈடுபடுவதன் மூலமும் புதிய நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் வழக்கமான கண் சிகிச்சையைத் தாண்டி, நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை அமைத்துத் தர, தீவிரமாக செயலாற்றுகிறோம்.

இவற்றையெல்லாம் மேற்கொள்வதுடன்பரிவுடன் கூடிய சிகிச்சையையும்கனிவுடன் கூடிய கவனிப்பையும் தொடர்ந்து பராமரிக்கிறோம்.

 – சென்னை குழுவினர்

கொரோனா காலத்திலும் குறையாத அக்கறை

ஊரடங்கின் ஆரம்பக் காலத்தில் அவசர சிகிச்சைகள் மட்டுமே மருத்துவமனையில் கவனிக்கப்பட்டாலும் மருத்துவமனை தொடர்ந்து செயல்படுகிறது.நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைஉறுதி செய்ய, சமூக இடைவெளி மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து ஸ்லிட் லேம்ப்களிலும் பாதுகாப்பு கவசங்கள் (Slit lamp breath protector) பொருத்தப்பட்டுள்ளன. பதிவு செய்யும் இடத்திற்கு அருகிலேயே தனியிடத்தில் போதுமான வசதிகள் உருவாக்கப்பட்டு, கண் ஒவ்வாமை மற்றும் கண் சிவப்பு போன்ற குறைபாடுகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குழந்தை நோயாளிகள் தவிர மற்றநோயாளிகளுடன் துணைக்கு வந்திருப்பவர்கள் மருத்துவமனைக்குள்ளே அனுப்பப்படுவதில்லை.துணைக்கு வந்திருப்பவர்களைக் காக்க வைக்க, மருத்துவமனையின் முகப்பு பகுதியில் (portico)பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியதுடன் கடுமையான கண் தொந்தரவுகள் இருந்தால் மறுபரிசோதனைக்கு வரும்படியும் தெரிவிக்கப்படுகிறது.மருத்துவமனைகளில் ஒவ்வொரு தளத்தின் தரைப்பகுதியும் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி சுத்தம் செய்யப்படுகின்றன. அதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. தீவிரமான துப்புரவு நெறிமுறைகளைப் பின்பற்றிய இல்லப் பராமரிப்பு பணியாளர்களுக்கும் துப்பரவு பணியாளர்களுக்கும் சிறப்பான பாராட்டுகள்.கொரானோ தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நெறிமுறையைப் பின்பற்றுவதைக் கண்காணிக்க தினமும் நான்கு முறை தணிக்கை செய்யப்படுகிறது. மருத்துவமனைக்குள் செயல்படும் மருந்து கடைகளில் கிருமிநாசினிகள் மற்றும் முகமூடிகள் (mask), விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிற மருத்துவமனைகளின் வேண்டுகோளுக்குஏற்ப, ஒவ்வொரு வாரமும் RoPகுழுவினர், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு விழித்திரை பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.

நாமே நமது பலம்

சென்னை, ஒரு ‘ஹாட் ஸ்பாட்’ என்பதால், பணியாளர்களின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. தற்காப்பு நடவடிக்கையாக, நெறிமுறையின்படி அவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.மருத்துவமனையைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் பணியாளர்களை அழைத்துச் செல்ல மருத்துவமனை வாகனம் அனுப்பப்படுகிறது. விடுதியில் காலியாக இருந்த அறைகளில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு அறையிலும் குறைவான செவிலியர்கள் உள்ளனர்.  காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்கள் முழுமையாக குணமடையும்வரை சிகிச்சை பெற்றனர்.வேலைக்கு வரமுடியாதவர்களுக்கும் ஏப்ரல் மாதத்தில் முழு ஊதியம் வழங்கப்படுகிறது.

நேர்மறை சிந்தனைகளும் புத்தம் புதிய வழிமுறைகளும்

செவிலியர்களை இரண்டு அணிக்களாகப் பிரித்து, மாற்று தினங்களில் மருத்துவமனை பணிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை பணி இல்லாத செவிலியர்களுக்கு காலை வேளையில் யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.  உடல், மனம்இரண்டும் ஆரோக்கியமாக இருக்க யோகா உதவுகிறது. பிறகு, சுயமுன்னேற்ற காணொளிக்கள் திரையிடப்படுகின்றன. செவிலியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக CMO அவர்கள், அவர்களிடம் தொடர்ச்சியாக உரையாற்றினார்  .பாடல், நாடகம், பட்டிமன்றங்கள்என பல வழிகளில் செவிலியர்களின் திறமைகள் வெளிப்பட ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கொரோனா காலத்தில் விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் பரிவைப் பேணுதல் எனும் தலைப்பில் தங்களது தனித்திறமைகள், புதுமையான யோசனைகள், பதாகைகள் மற்றும் கலைப் பொருட்களைத் தயாரிக்க ஊக்கப்படுத்தும் வகையில் மூன்று அணிக்களாக செவிலியர்கள் பிரிக்கப்பட்டனர். இவை அனைத்தும் அந்தந்த அணிகளுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டன. மிகுந்த உற்சாகத்துடன்விளையாட்டுகளில் பங்கேற்றும் தோட்டக்கலை, கண்ணாடி ஓவியம், பயன்படுத்திய பொருட்களிலிருந்து கலைப் பொருட்கள் மற்றும் மலர் அலங்காரம் என ஆர்வமுள்ள செயல்பாடுகளில் ஈடுபட்டும் தங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிட்டனர்.

கல்வி செயல்பாடுகள்

திறன் மதிப்பீடுகள் (Skill assessment), தேர்வுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட கல்வி செயல்பாடுகளிலும் செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தொற்றுநோய் குறித்த தற்போதைய செய்தி அறிக்கைகளும் விவரங்களும் தினசரி வழங்கப்பட்டன. தங்கள்செயல்பாடுகளைத் தொகுத்தும், பராமரித்தும் மின்னஞ்சலில் அனுப்பியும் ஒவ்வொரு துறை பணியாளர்களும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஜனவரி-மார்ச் வரையிலான காலாண்டு மதிப்பீடை அனைத்து துறை செவிலியர்களும் வழங்கினர். செயல் திட்டங்கள் அனைத்தும் குறித்து வைக்கப்பட்டுள்ளன.

Click to view other newsletters