Paykwik

தேனி -அரவிந்தில் ஊரடங்கு நாட்களின் செயல்பாடுகள்

அரவிந்த்-தேனி, கண் மருத்துவ சேவையுடன் நின்றுவிடாமல் சமூகப் பங்களிப்பிலும் எவ்வாறு முன்னோடியாக செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.  

நமது வாழ்நாளில் நாம் பார்த்திராத மிக மோசமான தொற்றுநோயாக கொரோனா உருவாகியுள்ளது. எதிர்பாராத விதமாக, நாம் அனைவரும் இந்தக் கொடிய காலத்தின் சாட்சியாகத் திகழ்கிறோம். விடாமுயற்சியும் மன உறுதியும் கொண்டுசெவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பணியிடத்தை விட்டு வெளியேறாமல், நோயாளிகளுக்குதேவையான நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கின்றனர். கொரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்க, கடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க, காவல்துறை இரவு பகலாகப் பணியாற்றுகிறது. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள, நகராட்சி அரும்பாடு படுகிறது. இந்த கடினமான சூழலைக் கடந்து வர, அனைவரும் ஒற்றுமையாக உழைக்கின்றனர். கற்றுக்கொள்வதற்கும் இந்த கடினமான சூழல், நமக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. நாமும் முறையாகக் கற்றுக்கொள்கிறோம். கொடிய தொற்று நோயை வருங்காலத்தில் நாம் ஒன்றிணைந்து நிச்சயம் வென்ற பிறகு, நிச்சயம் நாம் அனைவரும் பெருமைப்படுவோம்.

தேனி குழுவினர்

அறிமுகம்

தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேனியும் ஒன்று. பொதுவாக, ஒரு நாளைக்கு தேனி-அரவிந்திற்கு 350 வெளிநோயாளிகள் பரிசோதனைக்கு வருவர். ஊரடங்கு காலத்தில், அவசர கண் சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், சராசரியாக ஒரு நாளைக்கு 150 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்கு வந்தனர்.

சேவைகள், புதிய பாதையில்...

அரவிந்தின் மற்ற கிளைகளைப் போல, தேனி-அரவிந்திலும் நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.  நோயாளிகளிடம் சமூக இடைவெளியின் முக்கியத்துவம் தீவிரமாக வலியுறுத்தப்பட்டது.  சோப் நீர் உள்ள பாட்டிலை கைகளால் அழுத்தி, பயன்படுத்துவதைத் தவிர்க்க, கால்களால் அழுத்தும் சாதனங்கள்,(dispensers) இருக்கும் பொருட்களைக் கொண்டு பணியாளர்களால் உருவாக்கப்பட்டன. அவை, மருத்துவர்களின் விடுதியிலும் மருத்துவமனை நுழைவாயிலிலும் வைக்கப்பட்டன. நோயாளிகள், மருத்துவமனைக்கு நுழையும்போதே அவர்களின் சமீபத்திய பயண விவரங்கள் கேட்டு அறியப்படுவதுடன் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்படுகிறது. அவர்களின் கண் சிக்கலைப் பொறுத்து உரிய கிளினிக்குகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மருத்துவமனை கிளினிக்கிற்குள் கூட்டம் சேர்வதைத் தவிர்க்க, டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது.  இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நோயாளிகள் கிளினிக்கினுள் இருப்பர். சமூக இடைவெளியும் முறையாகப் பின்பற்றப்படுகிறது. துணைக்கு வந்துள்ளவர்களை பரிசோதனை பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. மாற்றாக, மருத்துவமனை நுழைவாயிலுக்கு அருகில் பந்தல் அமைக்கப்பட்டு அங்கே அவர்கள் காத்திருக்க, இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு விழித்திரை பரிசோதனை செய்யப்படுகின்றன.

பணியாளர்களின் பாதுகாப்பும் உடல்நலனும்

பணியாளர்கள் அனைவருக்கும் முகமூடி (mask), கையுறை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. நோயாளிகளைப் பரிசோதிக்கும் பணியாளர்களுக்கு முகக்கவசம் (face shield), தொப்பி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. பற்றாக்குறையை சமாளிக்க, பயன்படுத்திய முகமூடிகள் அனைத்தும் புறஊதா கதிர்கள் மூலம் தூய்மைப்படுத்தப்படுகின்றன. அலமாரி ஒன்றில் புறஊதா கதிர்களை வெளிப்படுத்தும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பயன்படுத்திய 40 முகமூடிகளை அலமாரி உள்ளே ஒரு மணி நேரம் வைத்து, புறஊதா ஒளியில் நோய்த் தொற்று இல்லாமல் தூய்மைப்படுத்தப்படுகின்றன. அலமாரி தானாகத் திறந்துகொண்டால் உள்ளே உள்ள புறஊதா மின் விளக்கு அணைந்துவிடும் வகையில், தானியங்கி (automatic) ஸ்விட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில் மூடியின் உள்பக்கத்தில் Formalin Hydrogen Peroxide எனும் வேதி திரவம் தடவப்பட்ட துணி வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளிடமிருந்து பெறப்படும் பணமானது இதில் போடப்படுகிறது. பின்னர், அந்த பணம் வங்கியில் செலுத்தப்படுகிறது. நோய்த் தொற்றை நீக்கும் Formalin திரவம் உள்ள பெட்டியில் பணத்தைப் போடுவதால் ரூபாய்த் தாள்களின் மூலம் நோய்த் தொற்று பரவுவது தவிர்க்கப்படுகிறது.

நோயாளிகளைப் பரிசோதிக்க, சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். காலை 7.30 முதல் 1.30 வரை ஒரு குழுவும், மதியம் 1.30 முதல் 4.30 வரை மற்றொரு குழுவும் செயல்படுகிறது.

விடுதியில் சமூக இடைவெளியைப் பராமரிக்க, செவிலியர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணியைத் தொடங்கும்முன், அனைத்து பணியாளர்களுக்கும் உடல் வெப்ப நிலை கண்டறியப்படுகிறது. பணியாளர்களுக்கு ஆரோவெல் (Aurowell) பரிசோதனையும் செய்யப்பட்டது.

செவிலியர்களுக்கு தொடர்ச்சியாக யோகா வகுப்புகள், கல்வி வகுப்புகள், கொரோனா பற்றிய விழிப்புணர்வு விரிவுரைகள் நடத்தப்படுகின்றன. ஓவியம், கலைவினைப் பொருட்கள்    மற்றும் பயன்படுத்திய பொருட்களிலிருந்து கலைப் பொருட்களை உருவாக்குதல் ஆகியவற்றிலும் செவிலியர்கள் ஈடுபாடு காட்டுகின்றனர்.

கொரோனா விழிப்புணர்வு பற்றியசுய மதிப்பீட்டிற்கான கேள்வித்தாள்கள், பணியாளர்களிடம் வழங்கப்பட்டன. அனைவரும் கலந்துரையாடி இவற்றிற்கு பதிலளித்தனர். இதன்மூலம், அனைவரும் கொரோனா பற்றிய தங்கள் அறிவைப புதுப்பித்துக் கொண்டனர்.

தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், பணி நேரத்திற்கு பிறகு தனிமையில் (quarantine) வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு தேனி-அரவிந்த் கேண்டீனில் உணவு தயாரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்டம் எங்கும் உணவு விடுதிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தேனி-அரவிந்த், இந்த உதவியை செய்தது.

Click to view other newsletters