Paykwik

திருப்பதி-அரவிந்தில் ஊரடங்கு நாட்களின் செயல்பாடுகள்

திருப்பதி-அரவிந்த் தொடங்கி ஒரு வருடம்தான் ஆகியுள்ள நிலையில், நோய்த்தொற்றின் தற்போதைய இக்கட்டான காலக்கட்டத்தை திருப்பதி-அரவிந்த் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைஅறிந்து கொள்வோம்.

திருப்பதி SV அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

நம் அரவிந்த் மக்களிடமிருந்து சற்று தூரமாக நாங்கள் இங்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. மரத்தின் கிளைகளைப் போல நாம் வெவ்வேறு திசைகளை நோக்கி பரந்து, விரிந்தாலும் நமது வேர்கள் ஒன்றாகவே உள்ளன.

திருப்பதியின் சாலைகள் அனைத்தும் கோவிலுக்கும் செல்லும் பக்தர்களால் நிரம்பியே இருக்கும். தற்போதைய சூழலால் ஆள் அரவமின்றி அமைதியாக உள்ளன. 24.05.2020 நிலவரப்படி தமிழகத்தில் 15,500 கொரோனா நோயாளிகளும் ஆந்திராவில் 2700 நோயாளிகளும் உள்ளனர். இரு மாநிலங்களையும் ஒப்பிடும்போது ஆந்திராவில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஊரடங்கு மிகவும் கண்டிப்பாக பின்பற்றப்படுகிறது. நிலைமையை நகராட்சி திறம்பட கையாள்வதுடன் முறையான திட்டமிடலுடன் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. பொது இடங்களில் மக்கள் போதிய சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்பதற்காக திறந்தவெளி விளையாட்டு மைதானங்கள் சிலவற்றில் காய்கறி சந்தைகளைத் திறந்தது.

திருப்பதி-அரவிந்தில் உள்ள குழு, துடிப்பும் பாசமும் கொண்ட குழுவாக இருப்பது எங்கள் பாக்கியம். தமிழகத்தில் உள்ள தங்கள் வீடுகளிலிருந்து பிரிந்து, வெகுதூரத்திற்கு வந்து இங்கு பணிபுரியும் செவிலியர்களை எண்ணி, நாங்கள் எப்போதும் பெருமைப்படுகிறோம். நோயாளிகளுடன் தொடர்ச்சியாக உரையாடி, அவர்கள் அனைவரும் தெலுங்கு மொழியில் அற்புதமாகப் பேசுகின்றனர். எங்கள் வழக்கமான சந்திப்புகளில் (internal meetings) அவர்கள் பேசும்போது அவர்களிடமிருந்து பிரத்யேக, பிராந்திய தெலுங்கு சொற்கள் வெளிப்படும் அளவிற்கு தெலுங்கு அவர்களுடன் இரண்டற கலந்துவிட்டது. தற்போது, மருத்துவமனை வளாகம் மிகவும் அமைதியாக இருப்பதால் இளங்காற்றும் அழகான பூக்களும் செவிலியர்களுக்கு அழகிய தருணங்களை ஏற்படுத்தித் தருகின்றன.

எங்கள் மருத்துவர்கள், மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடுமையாகப் பணிபுரிகின்றனர்.ஊரடங்கு காரணமாக பல சவால்கள் ஏற்பட்டுள்ள போதிலும் அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள இந்த நாட்களில் ஒப்பந்தப் பணியாளர்களுடன் அதிக நேரம் எங்களால் செலவிட முடிகிறது. நமது நோக்கம், அரவிந்த் பாணி போன்றவற்றை அவர்களால் சிறப்பாக உள்வாங்க முடிந்தது. வெகு சீக்கிரத்தில் அரவிந்துடன் அவர்கள் ஒன்றிணைந்து விட்டனர்.இந்த கடினமான நேரத்தில் பணியாளர்களின் மனஉறுதியை மேம்படுத்த, கடுமையாக முயற்சிக்கிறோம். நோயாளிகளுக்கான முன்பதிவு, பணியாளர்களிடம் நோய்த் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தனித்திறமைகளை வெளிப்படுத்துதல், நோயாளிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்தல், புதுமையான வழிமுறைகள் போன்ற முன்னுரிமைவழங்காத பல்வேறு பகுதிகளில் பணியாற்றுவதற்கான சிறந்த நேரம் இது

இந்த கொரோனா ஊரடங்குக் காலம், நம்மிடையே ஊக்கத்தையும் ஒற்றுமையையும் மேலும் வளர்த்தது. நாங்கள் ஒன்றிணைந்து பலவற்றை சாதித்தோம். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு ஆனந்தம். அரவிந்த் குடும்பத்தினரின் தொடர்ச்சியானஆசீர்வாதங்கள் மற்றும் ஆதரவுடன் வரும் நாட்களில் மேலும் பல சாதனைகளை எட்ட விரும்புகிறோம்.

 – திருப்பதி குழுவினர்

 

7 உதவிக் குறிப்புகள் (Tips)

வெளியில் பிரிண்ட் கடைகள் எதுவும் இயங்காததால், பல வண்ணங்களில் இரு மொழிகளில் செவிலியர்கள் பதாகைகளை (Posters) உருவாக்கினர். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும்ஏழு உதவிக்குறிப்புகளைத் தயார் செய்தனர். கைகளைக் கழுவுதல், கிருமிநாசினி(sanitizer) பயன்படுத்துதல்,துணைக்கு வந்துள்ளவர்களைத் தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டுமே உள்ளே அழைத்துச் செல்லுதல், முகமூடி(mask) அணிதல் குறித்த சரியான தகவல்களை வழங்கவும், எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற நினைவூட்டல்களைக் கொண்ட பதாகைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் வைக்கப்பட்டன.

சில மாற்றங்கள்

தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த, நோயாளிகளை சிகிச்சைக்கு அனுப்பும் வழித்தடங்களில் (patient flow) சில மாற்றங்களை மேற்கொண்டோம். விசாலமாக முற்றம் ஒன்று மருத்துவமனையினுள் மத்தியில் இருப்பது இதுபோன்ற சமயங்களில் பேருதவியாக உள்ளது. நோயாளிகள், மருத்துவமனையில் நுழைவதற்கு முன் சுருக்கமான கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு அதை நிரப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர்களின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்படுகிறது. கூட்டத்தை குறைக்க, மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே துணைக்கு வந்திருப்பவர்கள் (attenders) உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவமனைக்குள் நுழையும் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதுடன் நுழைவாயிலில் கைகளைக் கழுவி, கிருமிநாசினியை (sanitizer) கைகளில் தடவிக்கொள்கின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிப்பதை நினைவூட்ட, தரைப்பகுதிகளிலும் இருக்கைகளிலும் அடையாளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஸ்லிட்லேம்ப்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கேயே மருத்துவப் பரிசோதனை செய்தாலும் விரிவான பரிசோதனை தேவைப்படும் நோயாளிகள் யூனிட் 1 மற்றும் விழித்திரை பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டனர். நோயாளிகளை அணுகும் தன்மை, பரிசோதிக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டன.

ஆர்வத்துடன் பங்கேற்றல்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள், செவிலியர்களுக்காகத் தொடர்ந்து நடத்தப்படுவதால் நோய்த் தாக்கம், பாதுகாப்பு பற்றிய நிலையை அவர்கள் நன்கு புரிந்துகொள்கின்றனர். ஒவ்வொரு துறைக்குமான நெறிமுறைகளை (protocols) உருவாக்குவதில் செவிலியர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். மூத்த செவிலியர்கள், PowerPoint மூலம் தங்கள் துறை என்னென்ன பாதுகாப்பு நெறிமுறைகளை எப்படி கடைபிடிக்கிறது என்பதை விளக்கினர். NABH வகுப்புகளும் வாரந்தோறும் நடத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் சமூக இடைவெளி கடைபிடிக்கிறது. கற்றல் செயல்பாட்டை சுவாரசியமாக்க, வினாடி வினா (Quiz) நடத்தும் திட்டமும் உள்ளது.

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருத்தல்

ஒவ்வொரு நாளும் சிறந்த முறையில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள செவிலியர்களுக்கு அட்டவணை வரையறுக்கப்பட்டது. அவர்களின் அறைகள் மற்றும் தாழ்வாரங்கள் (corridors) எல்லா நேரங்களிலும் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு அவர்களிடமே அளிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் தெலுங்கு வகுப்புகளும் (Spoken classes) தினமும் நடத்தப்படுகின்றன. மருத்துவர் ஒருவரது மனைவி, செவிலியர்களுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கிறார். களைகளை அகற்றுதல், நீர்ப்பாசனம் செய்தல், தோட்டத்தை அலங்கரித்தல் மற்றும் ஒரு மூலிகை தோட்டம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுதல் என செவிலியர்களின் குழு, தோட்டக்கலையில் ஆர்வமுடன் உள்ளனர். சிலர் கலை மற்றும் கைவினைப்பொருட்களை உருவாக்குகின்றனர். மருத்துவமனை கழிவுகளிலிருந்து கலைப் பொருட்களையும், பாட்டில் தொப்பிகளில் சதுரங்கக் காய்களை (Chess set) உருவாக்கியுள்ளனர். விடுதியில் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகளையும் சிற்றுண்டிகளையும் (snacks) வழங்கிய ஒப்பந்த கேண்டீன் பணியாளர்களுக்கு சிறப்பு நன்றி.

புத்தம்புதிய கண்டுபிடிப்புகளும் வழிமுறைகளும்

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் இந்த நோய்த் தொற்று அபாய வெளிப்பாட்டை அதிகரித்துள்ளது. மயக்க மருந்து அளிக்கும் மருத்துவர்களும் விதிவிலக்கல்ல. மயக்க மருந்து அளிக்கும்போது நோயாளிகளிடமிருந்து மருத்துவர்களுக்கு நீர்த்திவலைகள் பரவக்கூடும். மயக்க மருந்து நிபுணர் மீது நீர்த்திவலைகள் தெறிப்பதைத் தடுக்க, ஏரோசல் பெட்டி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குறுகலாக உள்ள, கண் அறுவை சிகிச்சை செய்யும் கட்டில்களில் இதை வைப்பது கடினம். மேலும், ஏரோசல் பெட்டியில் உள்ள துளைகள் மிகப் பெரியதாகத் தோன்றுகின்றன. உதவி மயக்க மருந்து நிபுணருக்கும் அதிக பாதுகாப்பு இல்லை. Flexible Aerosol X-Box எனும் புதிய சாதனத்தை திருப்பதி-அரவிந்த் குழுவினர் கண்டறிந்துள்ளனர். அலுமினிய திரைச்சீலை,  பிளாஸ்டிக் திரை போன்ற பொருட்களைக் கொண்டு அதிக எடை இல்லாத, குறைவான செலவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியின் அனைத்து பக்கங்களும் பாதுகாப்பாக உள்ளன.

Regional Science Centre மையத்துடன் இணைந்து திருப்பதி-அரவிந்த் குழுவினர் சென்சார் மூலம் இயங்கும் சானிட்டிசர் டிஸ்பென்சர் சாதனத்தை உருவாக்கியுள்ளனர். கிருமி நாசினி உள்ள பாட்டிலை தொட்டு பயன்படுத்தும் தேவையை இந்த சாதனம் நீக்குகிறது. முன்மாதிரி (prototype) தயாராக உள்ளது. முழு சாதனத்தின் இறுதி வடிவம், விரைவில் மற்ற அரவிந்த் மையங்களுடன் பகிரப்படும்.

Click to view other newsletters