(ROP) என்றால் என்ன?

Retinopathy of Prematurity (ROP) என்பது குறைமாதத்தில் மற்றும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விழித்திரையில் ஏற்படும் இரத்த நாளங்களின் ஒழுங்கற்ற வளர்ச்சியே ஆகும். தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தையின் கண்ணில் இரத்த நாளங்களின் வளர்ச்சி நடுப்பகுதியிலிருந்து ஓரப்பகுதிகளை நோக்கி வளரும்.  குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இரத்த வளர்ச்சி சீராக இருப்பதில்லை. இரத்த நாளங்களின் வளர்ச்சி ஒழுங்கற்ற முறையில் நடப்பதனால் குழந்தையின் விழித்திரையில் பாதிப்பு ஏற்படுவதற்கு ஏதுவாகிறது.

குறைமாதக் குழந்தைகளுக்கு ஏன் விழித்திரையின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுகிறது?

இதுவரை ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னனேற்றத்தில் ஏன் இந்த மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதற்கான உரிய காரணத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. இதுவரை மேற்கொண்ட பரிசோதனைகளில்  பிறப்பு 36 வாரங்களும் அதற்கு குறைவாகவும் அல்லது பிறப்பு எடை 2000 கிராமும் அதற்கு குறைவாகவும் பிறக்கும் குழந்தைகளுக்கு இப்பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அத்துடன் குறைபிரசவ குழந்தைக்கு கடுமையான நோய் (மூச்சுத்திணறல், தொற்று, இரத்த ஏற்றம் தேவைப்படுதல், மூளையில் இரத்த கசிவு) பிறப்பின்முன்பின் காலப்பகுதியில் இருந்தால் விழித்திரை பரிசோதனை செய்யப்படும்.

குழந்தைகளுக்கு விழித்திரை பாதிப்பு உள்ளது என்பதை மருத்துவர்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

சிறப்பு தேர்ச்சி பெற்ற விழித்திரைப் பிரிவு மருத்துவரால் மட்டும் தான் உங்கள் குழந்தைக்கு விழித்திரை பாதிப்பு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க இயலும். கண் பரிசோதனை, குழந்தை பிறந்து 2லிருந்து 3 வாரங்களில் தொடங்கி, இரத்த நாளங்களின் வளர்ச்சி முழுமை அடையும் வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு விழித்திரை பாதிப்பு இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

சிறப்புத் தேர்ச்சி பெற்ற விழித்திரைப் பிரிவு மருத்துவர் விழித்திரையின் ஒழுங்கற்ற வளர்ச்சியின் தன்மையை பரிசோதனை மூலம் கண்டறிந்து பதிவு செய்து கொள்வார். பாதிக்கப்பட்ட குழந்தைகளை தொடர்ச்சியாகப் பரிசோதனை செய்வதின் மூலம் விழித்திரையின் வளர்ச்சியைக் கண்காணிப்பார்.

விழித்திரை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எப்படி மருத்துவம் செய்யப்படுகிறது?

விழித்திரையில் அதிகம் பாதிப்பு இல்லாத குழந்தைகளுக்கு சிகிச்சை தேவைப்படுவது இல்லை. ஏனெனில் நாளடைவில் குழந்தை வளர வளர இரத்த நாளங்களின் வளர்ச்சி சீராகி விடும். விழித்திரையில் அதிகம் பாதிப்பு உள்ள, ஆனால் விழித்திரை விலகல் இல்லாத குழந்தைகளுக்கு, லேசர் சிகிச்சை செய்வதின் மூலம், இரத்த நாளங்களின் ஒழுங்கற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும்.

நான்காம் நிலை
லேசர் சிகிச்சைக்குப் பின்

லேசர் சிகிச்சையின் மூலம் விழித்திரை பிரிதலை பெரிய அளவில் தடுக்க முடிகிறது. விழித்திரை பிரிதல் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே வழியாகும். அவ்வாறு செய்தாலும் பார்வை கிடைக்கும் வாய்ப்பு அரிதாகத்தான் இருக்கும்.

சிகிச்சைக்குப் பிறகு மறுபரிசோதனை தேவையா?

ஆம், சிகிச்சைக்குப் பிறகும் குழந்தைகளுக்கு விழித்திரையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, குறிப்பிட்ட வயது வரை 30நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மறுபரிசோதனை செய்வது மிகவும் அவசியமானது.

நீண்ட நாட்களுக்கு பிறகும் கண் பாதிப்பு ஏற்படும்வாய்ப்பு உள்ளதா?

மற்ற குழந்தைகளை விட குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் அதிகமாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் சோம்பேறிக் கண் மற்றும் மாறுகண் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

நாம் செய்ய வேண்டியது என்ன?

குறைமாதத்தில் (குறைந்த எடை <1200கிராம் ; குறைமாதம் <28 வாரங்கள்) பிறக்கும் குழந்தைகள் பிறந்து 30 நாட்களுக்குள் ஒரு முறையேனும் விழித்திரை பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். கண் விழித்திரைப் பிரிவு சிறப்பு மருத்துவரின் பரிந்துரைப்படி தொடர்ந்து மறுபரிசோதனைக்கு குறித்த நேரத்தில் தவறாது வருவது மிகவும் அவசியம். இல்லையெனில் பார்வை இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது!

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
குழந்தைகள் விழித்திரை சிகிச்சையகம் – அரவிந்த கண் மருத்துவமனைகள்

மதுரை, தொலைபேசி: (0452)4356100

தேனி, தொலைபேசி: (04546)252658

திருநெல்வேலி, தொலைபேசி :(0462)4356100

கோயம்புத்தூர், தொலைபேசி: (0422)4360400

பாண்டிச்சேரி, தொலைபேசி: (0413)2619100

சேலம், தொலைபேசி: (0427)2356100

சென்னை, தொலைபேசி: (044)40956100

திருப்பதி, தொலைபேசி: (0877)2502100