கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் ஆரோலேபின் பங்களிப்பு
உடனடி தேவை மீது குவிந்த கவனம்
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் ஒட்டுமொத்த தேசமே ஸ்தம்பித்து நின்றது. ஆரோலேபிலும் வழக்கமான உற்பத்தி யாவும் நிறுத்தப்பட்டன. அரவிந்த் குழுமத்தின் தலைவரும் பிற மூத்த உறுப்பினர்களும் நிலைமையின் தீவிரத்தை உணரத் துவங்கியதும் ஊரடங்கினால் ஏற்படும் சிக்கல்களைத் திறம்பட கையாள, பல்வேறு குழுக்களை உருவாக்கினர்.
பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்தும்போது பின்பற்ற வேண்டிய மருத்துவ நெறிமுறைகளை உருவாக்குதல் மற்றும் அனைத்து அரவிந்த் மருத்துவமனைகளுக்கும் தேவையான பாதுகாப்பு கவசங்களைக் கொள்முதல் செய்யும் குழுவிற்கு ஆரோலேப் பொறுப்பேற்றுக் கொண்டது. கொரோனா வைரஸ் நோய் தடுப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதில் ஆரோலேப் கவனம் செலுத்தியது. அவசரக்கால தேவைகளில் கவனம் செலுத்தினாலும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முதல் முன்னுரிமை வழங்கப்பட்டது. நோயாளியின் பாதுகாப்பும் அவருடன் துணைக்கு வருபவர்களின் பாதுகாப்பிலும் போதிய கவனம் செலுத்தப்பட்டது.
1980-களில் அரவிந்த் மருத்துவமனைகள் எதிர்கொண்ட ஒரு சவாலுக்கு தீர்வாக ஆரோலாப் உருவானது.தற்போது உலகளவில் ஒரு சவால் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் பாதுகாப்புக் கவசங்களை கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்குவதும் அவற்றை தேவைப்படும் இடங்களுக்கு ஊரடங்குக் காலத்தில் அனுப்பி வைப்பதும் சவால்தான். எனினும், தீர்க்கமுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆரோலேப் பணியாளர்கள் அனைவரும் இணைந்து இந்த சவாலை சிறப்பாக எதிர்கொள்கின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள கண் மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கவசங்களை வழங்க பணியாற்றி வருகிறோம். கொரோனா வைரஸ்க்கு எதிரான இந்த போராட்டத்தில் ஆரோலேப் தொடர்ந்து தனது பங்களிப்புகளை அளிக்கும்.
கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் அரவிந்த் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருடனும் இணைந்துக் கொள்கிறேன். நம் தேசம், இந்த தொற்றுநோயிலிருந்து நிச்சயம் மீண்டு வரும் என உறுதியுடன் நம்புகிறேன்.
R.D. ஸ்ரீராம்
நிலைமையை எதிர்கொள்ள ஆயத்தமடைதல்
இதுவரை வெளியான பல்வேறு வழிகாட்டுதல்களை ஆராய்ந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள மற்ற மருத்துவ நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டும் திரு. கிருஷ்ணகுமார், பல்வேறு விதமான மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் பாதுகாப்பு கவசங்களை ஆவணப்படுத்தத் தொடங்கினார். முகமூடிகள், சுவாசக் கருவிகள், கையுறைகள், முகக் கவசங்கள், அங்கிகள் மற்றும் அறிகுறிகள் அற்ற நோயாளிகளிடமிருந்து (asymptomatc patients)பாதுகாத்துக் கொள்ளும் சாதனங்கள் என அனைத்தும் பாதுகாப்பு கவசத்தில் அடங்கும். அரவிந்தின் மூத்த மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து இந்த ஆவணங்கள் விரிவுப்படுத்தப்பட்டன. எந்த வகை பாதுகாப்புக் கவசங்களை யார், எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதும் எவ்வாறு தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மறுபயன்பாட்டு நெறிமுறைகள் எவை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
லைக்கோ ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்புக் கவசம் குறித்த காணொளி கருத்தரங்கத்தில் (Webinar) திரு. கிருஷ்ண குமார் உரை நிகழ்த்தினார். லைக்கோவின் நேச மருத்துவமனைகளும் (partner hospitals) இந்தியாவின் பிற மருத்துவமனைகளும் கருத்தரங்கில் பங்கேற்று பயனடைந்தனர்.
தொற்று நோயின் தாக்கம் உலகளவில் இருப்பதால் பாதுகாப்புக் கவசங்களைக் கொள்முதல் செய்வது பெரும் சவாலாக இருந்தது. திரு. ஜெயச்சந்திரன், திரு. வெங்கடேஷ், மற்றும் திருமதி சிகப்பி ஆகியோரின் தீவிர உழைப்பால் பல்வேறு இடங்களிலிருந்து வாங்க முடிந்தது. நமது 11 மருத்துவமனைகளுக்கும் தேவையான அளவில் சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும் பணியிலும் இவர்கள் கவனம் செலுத்தினர்.
விரைவான நடவடிக்கை
முக கவசங்கள் மற்றும் ஸ்லிட் லேம்ப்பில் பொருத்தும் கவசங்கள் எதுவும் கடைகளில் கிடைக்கவில்லை. தன்னிடம் உள்ள வளங்களைக் கொண்டே எளிமையான ஆனால் மிகவும் பயனுள்ள பொருளை ஆரோலேப் வடிவமைத்தது. இவற்றை சிறப்பாக வடிவமைத்த பெருமை, திரு. ராஜசேகர், திரு. ராம்நாத் மற்றும் அவர்களது குழுவையே சேரும். ஆரோலேபில் உள்ள பேக்கிங் மெடீரியல் மற்றும் உயர்தர பிளாஸ்டிக் சீட்கள் கொண்டு முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த முகக் கவசத்திற்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.
கண் மருத்துவர்களுக்கு மட்டும் முகக் கவசங்களின் தேவை இருப்பதில்லை. பிற மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர் என பலருக்கும் இதன் தேவை உள்ளது. ஆரோலேப் இதுவரை 2300 முகக் கவசங்களை இலவசமாக தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்களுக்கு கொடுத்துள்ளது. தேவை அதிகமுள்ளதால் உற்பத்தி இன்னமும் தொடர்கிறது.
அனைவரும் முகமூடிகள் அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுவதால், அனைவரது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆரோலேப் குழுவினர், வல்லுநர்களுடன் ஆய்வில் ஈடுபட்டும் கலந்தாலோசித்தும் விலை குறைவான தீர்வைக் கண்டறிந்தது. பயன்படுத்தப்பட்ட முகமூடிகளையும் சுவாசக் கருவிளையும் தொற்று நீக்கும் முறையில் தூய்மைப்படுத்தி மீண்டும் அவற்றை பயன்படுத்தும் சிறப்பான யோசனையை அமல்படுத்தியது. புற ஊதாக் கதிர்களை வெளிப்படுத்தும் மின் விளக்குகளில் குறிப்பட்ட தூரம் மற்றும் அலைவரிசையில் பயன்படுத்திய முகமூடிகளை வைக்கும்போது அவை தூய்மையாகும். ஆனால் அப்படி ஒரு சாதனம், சந்தைகளில் கிடைப்பதில்லை.
நோயாளி விவரங்களை வைக்கும் அலமாரி போன்ற சிறிய அடுக்குகளை (racks) மருத்துவமனைகளிலிருந்து பெற்று, அவற்றில் முறையானநெறிமுறையைப் பின்பற்றி தூய்மைப்படுத்தும் சாதனமாக மாற்றும் பணியைத் தொடங்கியது. சுவாசக் கருவியின் இரு பக்கங்களையும் ஒரே நேரத்தில் திறம்பட தொற்று நீக்கி, தூய்மைப்படுத்தும் முறையை ஆரோலேப் பிரத்யேகமாக உருவாக்கியது. ஆரோலேபின் திரு. சுதன் மற்றும் அவரது குழுவினரும் விஸ்வம் இண்டஸ்ட்ரீஸ்ஸின் திரு விஸ்வநாத்தும் இணைந்து புற ஊதாக் கதிர்களை வெளிப்படுத்தும் மின் விளக்குகளைப் பொருத்தும் பணிகளை (UVD Units) மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கினர். அரவிந்தின் அனைத்து மருத்துவமனைகளுக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட UVD சாதனங்களை ஆரோலேப் அனுப்பி வைத்துள்ளது. இதைச் சரியாகப் பொருத்துவதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.
புற ஊதா சாதனங்களின் பயன்பாடு மற்றும் சுவாசக் கருவிகளைத் தூய்மைப்படுத்தல் தொடர்பான அனைத்து பயிற்சித் திட்டங்களையும்திரு. கார்த்திக் விஸ்வநாதன் உருவாக்கியுள்ளார்.
அனைத்து அரவிந்த் மருத்துவமனைகளுக்கும் குறித்த நேரத்தில் பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் புற ஊதா சாதனங்கள் கிடைத்தனவா என்பதை உறுதி செய்யும் பணிகளை திரு. கார்த்திகேயன் மேற்கொண்டார். அரவிந்த் பணியாளர்களுக்கு புற ஊதா சாதனங்களின் பயன்பாட்டை விளக்கும் பணிகளையும் அவர் ஒருங்கிணைத்தார்.
அரவிந்த் மருத்துவமனைகள் மற்றும் பிற வாடிக்கையாளர்களின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஆரோ-ரப் (Aurorub)மற்றும் பிற கிருமிநாசினிகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டன.இந்த அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ச்சியாக விநியோகம் செய்யஆரோலாப் உற்பத்தி மற்றும் விநியோகிக்கும் குழுவினர் (Shipping team), ஊரடங்கு காலத்திலும் தீவிரமாகப் பணியாற்றின.
கண் மருத்துவ உலகிற்கு பகிர்ந்து கொள்ளுதல் எனும் அரவிந்தின் நெறிமுறைகளுக்கு ஏற்ப, 2 முகக் கவசங்கள், 500 மிலி அளவுள்ள 2 ஆரோரப், மற்றும் 1 ஸ்லிட்லேம்ப் கவசம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பாதுகாப்பு தொகுப்பைத்(Kit)தமிழகம் முழுவதும் கண் மருத்துவர்களுக்கு ஆரோலேப் வழங்கியுள்ளது. இந்த விநியோகத் திட்டத்தை திரு. சிவானந்தம் மற்றும் குழுவினர் உருவாக்கி, தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.
வாடிக்கையாளர்கள்தான் பிரதானம் என்பதை மனதில் கொண்டு திரு. பாலசுப்பிரமணியன் தலைமையிலான விற்பனைக் குழுவானது 300க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தொகுப்புகளை (Kits) 30-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை முழு அர்ப்பணிப்புடன் செய்தது. ஊரடங்கு முடிந்ததும் நாடெங்கும் உள்ள பல கண் மருத்துவர்களுக்கு இந்த பாதுகாப்பு தொகுப்புகள் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். இதற்கான பணிகளை மதுரையிலிருந்து திரு. சித்திக் மேற்கொள்கிறார்.
வழக்கமான உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், ஊரடங்கு காலமானது பயனுள்ளதாகவே கழிக்கப்பட்டது. குறைந்த பணியாளர்கள் மற்றும் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களைக் கொண்டு ஊரடங்கு காலத்திற்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு சிக்கலின்றி பொருட்களைஅனுப்பி வைக்க, சில அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கப்பட்டன. சமூக இடைவெளி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உற்பத்தி பணியாளர்கள்கடைபிடிக்கின்றனரா என்பதை கடும் கண்காணிப்பு மூலம் மேற்பார்வை செய்யப்பட்டனர்.
Zoom இணையதளம் வழியாக விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் குழுவினர், ஆரோலேப் பொருட்கள் பற்றிய பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றனர். ஆரோசிக்ஸா மென்பொருட்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் தேர்வும் எழுதினர். இந்த காலகட்டத்தைநிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் முடிக்க கொள்முதல், கணக்குகள், இறக்குமதி போன்ற அனைத்து துறைகளும் பயன்படுத்திக் கொண்டன. ஊரடங்குக் காலத்திலும் கிடைத்த ஆர்டர்களை எதிர்கொள்ளவோ பொருட்களை தயார் செய்யவோ சர்வதேச மார்க்கெட்டிங் குழுவினர் தவறவில்லை. ஆர்டருக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கூரியர் சேவைகள் செயல்படத் தொடங்கியதும் அனுப்பி வைப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளன..
உற்பத்தித் துறையில் பணியாற்றும் இளம் பெண்கள், உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் தொடர் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். யோகா பயிற்சிகள்தினசரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவர்கள் ஈடுபட்ட உட்புற (Indoor) மற்றும் வெளிப்புற (Outdoor) விளையாட்டுக்கள் யாவும் சுறுசுறுப்பாகவும் வேடிக்கையாகவும் இருந்தன. எனினும், சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா என்பதிலும்தீவிரகவனம் செலுத்தப்பட்டது.