ஊரடங்கு காலத்தில் கற்றுக்கொண்டவை
கற்றதும் பெற்றதும்
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், என்னுள் பலவித உணர்வுகள் ஏற்பட்டன. அதன் தீவிரம் குறித்து முதல் வாரத்தில் நாங்கள் தெளிவாக அறிந்திருக்கவில்லை. சமூக இடைவெளியை மனதில் கொண்டு விடுதியில் தங்கியிருந்த செவிலியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து மருத்துவமனையின் பிற இடங்களில் தங்க வைக்க முடியுமா என யோசித்தோம். விடுதியில் தங்கியிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மிகக் குறைந்த அளவில் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்தனர்.
முதல் வாரத்தின் இறுதியில், ஒரு சிறிய குழப்பமான (நான் உணர்ந்த வரையில்) நிலை இருந்தது. அதாவது, செவிலியர்களை வழிநடத்த சரியான திட்டமிடல் ஏதும் இல்லை. அவர்களது நல்ல பழக்க வழக்கங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் நேரம் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்றும் உணர்ந்தேன்.
இரண்டாம் வார இறுதியில், சில மேலாளர்கள் மற்றும் சில மூத்த செவிலியர்களை அழைத்து செவிலியர்களை பயனுள்ள வகையில் ஈடுபடுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசித்தோம். பாடத்திட்டங்கள் தொடர்பான வகுப்புகள் எடுப்பதும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசுவதும் மட்டும் போதாது என்றும் அது அவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தலாம் என உணர்ந்திருந்தோம். எனவே, சுழற்சி முறையில் அவர்களை தினந்தோறும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்தோம்.
மூன்றாம் வாரம் முதல், அனைத்து செவிலியர்களும் சீருடையில் காலை 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு செவிலியர்களுக்கு காலையில் அவர்களது பாடத் திட்டங்கள் குறித்தும், பொது அறிவு குறித்தும் வகுப்புகள் எடுக்கப்பட்டன. வீடியோக்கள் மற்றும் நடித்துக் காட்டுதல் (Roleplay) மூலம் பொது வகுப்புகள் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டன. அதன் பிறகு பாடம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டனர். பணியாளர்களும் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். மதிய வேளைகளில் சுழற்சி முறையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து திரைப்படங்களைப் பார்த்தனர்.
மருத்துவமனையின் வசதிகள் குறித்து முதல் வாரத்தில் ஆராய்ந்தோம். சீரமைக்க வேண்டிய, சுத்தம் செய்யப்பட வேண்டிய பகுதிகளைக் கண்டறிந்து இல்லப்பராமரிப்பாளர்களின் உதவியுடன் வெளியிலிருந்து ஒப்பந்த மேற்பார்வையாளர்களைக் (outsourced supervisors) கொண்டு சீரமைப்புப் பணிகளைச் செய்தோம். தோட்டப் பராமரிப்பாளர்களின் உதவியுடன் தோட்டப் பராமரிப்பைத் தொடங்கினோம்.
தனிப்பட்ட முறையில், இரண்டாவது வார இறுதியில், நான் என்னை அமைதிப்படுத்திக்கொண்டு, இந்த ஊரடங்கை நினைத்து குழப்பி கொள்ளாமல் அதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள தயாரானேன். ஆனால், சீரிய முறையில் என்னை நான் வழி நடத்திக்கொள்ளவும் விரும்பினேன். அப்போதுதான், மீண்டும் வழக்கமான பணிக்குச் செல்லும்போது எளிதானதாக இருக்கும். தினந்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டேன். புத்தக வாசிப்பைத் தொடங்கினேன். புதிய உணவு பதார்த்தங்களைச் சமைக்கக் கற்றுக்கொண்டேன். புதிய இனிப்பு வகைகளைச் செய்து சுவைத்துப் பார்த்தேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்பு அமைதியாக அமர்ந்து மாலை வேளைகளில் (6pm-7pm) பறவைகளைப் பார்த்து மகிழ்ந்தும் அவை எழுப்பும் இசையையும் கேட்டும் இன்புற்றேன்.
மருத்துவமனையில் மலர் அலங்காரம், சமையல் வகுப்புகள் மற்றும் பயன்படுத்திய பொருட்களில் கலைப் பொருட்கள் செய்தல் போன்றவற்றை முயற்சி செய்தோம். செவிலியர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதற்கும் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை உணர்ந்துகொள்வதற்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இத்திறமைகளை நமது அன்றாடப் பணிகளில் நிச்சயம் கண்டறிந்திருக்க இயலாது. ஒவ்வொரு செவிலியரும் பணி, கற்பனைத்திறன் கொண்ட செயல்பாடுகள்,தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் கலந்துகொண்டது மகிழ்ச்சி தரக்கூடிய அனுபவமாக இருந்தது.
மூன்றாவது வாரத்திலிருந்து இப்போது வரை, ஒவ்வொரு நாளும் வாழ்நாள் முழுவதற்குமான படிப்பினைகளும் அனுபவங்களும்கிடைத்த வண்ணம் உள்ளன. கோயம்புத்தூர்-அரவிந்தில் செயல்படும் இத்தகைய குழுவில் நானும் ஒரு நபராக இருப்பதை எண்ணி மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்தக் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளித்து இந்த ஊரடங்கு காலகட்டத்தை அனைவருக்கும் நினைவில் நிற்கும் ஒன்றாக மாற்றுகின்றனர். இன்று மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்றால், அதற்கு நம்மைச் சுற்றியுள்ள பந்தங்களே காரணம். எனவே, உறவுகளைப் பேணிக்காக்க தேவையான முயற்சியை எடுப்போம். இவைதான் இந்த ஊரடங்கு காலத்தில் நான் கற்றுக்கொண்டவை.
டாக்டர். கல்பனா நரேந்திரன்
கொரோனா காலத்தில் நிகழ்ந்தவை
ஊரடங்கும் தனிமைப்படுத்திக் கொள்ளுதலும் உலகெங்கும் தொடர்வதால் ஒய்வு நேரம் அதிகளவில் கிடைக்கிறது. இந்தத் தருணத்தையும் வாய்ப்பையும் எவ்வாறு உபயோகமான வழியில் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதென்று பலருக்கும் தெரிவதில்லை. ஒரு மருத்துவமனையாக, நோயாளிகளுக்கு சிறந்த பாதுகாப்பைத் தொடர்ந்து வழங்குவது அவசியம். மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், தொற்று பரவுவதைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
புதிய முறைகளில் பாதுகாப்பான கண் மருத்துவ சேவை
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் மருத்துவமனையில் பல புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டு அவை திறம்பட பின்பற்றப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. வயதான நோயாளிகள் மற்றும் குழந்தை நோயாளிகளுடன் துணைக்கு வருபவர்கள் மட்டுமே மருத்துவமனைக்குள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பிற நோயாளிகளுடன் வருபவர்கள் மருத்துவமனைக்கு வெளியே பிரத்யேக இடத்தில் காத்திருக்கின்றனர். தேவைப்பட்டால் மட்டுமே அவர்கள் உள்ளே அழைக்கப்படுவார்கள். நோயாளி மற்றும் அவருடன் துணைக்கு வருபவர் வெவ்வேறான வண்ணஸ்டிக்கர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். நோயாளி மற்றும் துணைக்கு வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. மேலும் முகமூடி (mask) அணிந்துள்ளனரா கைகளைக் கழுவியுள்ளனரா என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. முகமூடி அணியாமல் வருபவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருத்துவமனை வளாகத்திலேயே முகமூடி விற்பனை செய்யப்படுகிறது.
நுழைவாயிலில் கண் குறைபாடுகளுக்கு ஏற்ப நோயாளிகள் பிரிக்கப்படுகின்றனர். கண்ணில் தொற்று ஏற்பட்ட நோயாளிகள், மருத்துவமனைக்கு உள்ளேயே புதிய தனி இடத்தில் பரிசோதனை செய்யப்படுகின்றனர். இது, அவர்கள் மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கிறது. மருத்துவர்கள், பாதுகாப்பு கவசத்தை (PPE)அணிந்துள்ளனர். பரிசோதனைகள் செய்யும் செவிலியர்களுக்கு முகமூடி, முகக்கவசம் (face shield) மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவப் பரிசோதனையின் போது நோயாளிகளிடமிருந்து எவ்வித நீர்த்திவலையும் மருத்துவர் மீது படாத வண்ணம் கவசமானது (splash-guard) ஸ்லிட் லேம்ப்பின்முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளியைப் பரிசோதித்த பின்பும் இந்த கவசம், சுத்தம் செய்யப்படுகிறது. நோயாளிகள் மற்றும் துணைக்கு வருபவர்களிடம் கொரானா வைரஸ் தொற்று தொடர்பான சிறப்பு ஒப்புதல் படிவத்தில் ஒப்புதலும் கையொப்பமும் வாங்கப்படுகின்றன.
நோயாளிகளிடமும் துணைக்கு வருபவர்களிடமும் அவர்களின் இருப்பிடம், சமீபத்திய பயண விவரம் மற்றும் தற்போதைய உடல் நிலை பற்றிய விவரங்களை நிரப்பிக் கையொப்பமிட வேண்டும். இந்தப் படிவம், நோயாளியின் மருத்துவக் குறிப்புகளோடு இணைக்கப்படும்.
காத்திருக்கும் இடங்களிலும் பரிசோதனை இடங்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றியே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் எத்தனை நோயாளிகள் உள்ளே அமர முடியும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு சாத்தியமுள்ள நோயாளி, மருத்துவமனைக்கு வந்திருந்தால் அவருக்கென தனிமைப்படுத்தப்பட்ட அறை உருவாக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், துணைக்கு வந்திருப்பவர்கள் மற்றும் நம் பணியாளர்களிடையே பயம் ஏற்படாத வகையில் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள மஞ்சள் குறியீடு குழு (Code Yellow team) தயாராக உள்ளது.
சுகாதாரமே பிரதானம்
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என வற்புறுத்தப்படுகிறது. அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கிருமி நாசினிகள் உள்ள பாட்டில்கள், சுவரில் பொருத்தப்பட்டோ எளிதில் தென்படும் மேஜைகளிலோ மருத்துவமனை வளாகத்தினுள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. தரை, மாடிப்படிகளின் கைப்பிடி, நாற்காலிகள், கதவுகளின் கைப்பிடி போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையோ ஒவ்வொரு நோயாளியையும் பரிசோதனை செய்த பின்போ ஸ்லிட் லேம்ப் மற்றும் மற்ற பரிசோதனைக் கருவிகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறது.
நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிசெய்வதற்கு அறைக் கதவு மற்றும் ஜன்னல்கள் திறந்தே வைக்கப்படுகின்றன. தொற்று ஏற்படாமல் தடுக்கும் அனைத்து நெறிமுறைகளும் தீவிரமாக பின்பற்ற அதிக கவனம் செலுத்தப்படுகிறது. துறைத்தலைவர் / ஒருங்கிணப்பாளர் / மூத்த செவிலியர்களால் இது கண்காணிக்கப்படுகிறது. செவிலியர்களின் (MLOP) உடல் நலக் குறைவைப் பதிவு செய்யும் நோட்(sick note) வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல் நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கென தனி அறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்போதும் விழிப்புணர்வுடன் இருத்தல்
சமூக அக்கறையுள்ள நிறுவனமாக நாம் அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும் போது, பணியாளர்களும் சோர்வடையாமல் ஒத்துழைப்பு வழங்க உறுதியுடன் இருக்க வேண்டும். வேலை செய்வது அவமானம் அல்ல; செயல்படாமல் சும்மா இருப்பதே அவமானம் என்பது பிரபல கிரேக்க கவிஞர் ஹெஸியோட் அவர்களின் கூற்று. நம் பணியாளர்களின் அறிவு, திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், புதியவற்றைக் கற்றுக் கொள்ளவும் இந்த ஊரடங்கு காலம் வாய்ப்பை வழங்கியது.
பணியாளர்கள், அர்த்தமுள்ள வகையில் நேரத்தைச் செலவிடுவதை உறுதிப்படுத்த, பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. விடுதிகளில் உள்ள முதுகலை மருத்துவர்கள் மற்றும் மேற்பயிற்சி மருத்துவர்கள் மாலை வேளைகளில் தொடர்ச்சியாக விரிவுரைகள் (lectures) மற்றும் காணொளி கருத்தரங்குகளில் (Webinars) தொடர்ச்சியாகப் பங்கேற்கின்றனர். கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் மருத்துவமனையின் சிறப்புப் பிரிவுகளுக்குத் தேவைப்படும் விழிப்புணர்வு பதாகைகளை (Posters) உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை இந்தக் குழு மேற்கொள்கிறது. மூத்த மருத்துவர்களும் காணொளி கருத்தரங்குகளில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். முதுகலை மருத்துவர்களுக்கான காணொளி கருத்தரங்கு ஒன்றை குழந்தைகள் கண் நலன் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. கொரோனா வைரஸ் குறித்த நேரடி காணொளி அமர்வு ஒன்றை கருவிழிப் பிரிவு ஒருங்கிணைத்தது.
நாள் முழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக பல செயல்பாடுகள் செய்யும்படி செவிலியர்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றனர். அனைத்து நேரங்களிலும் சமூக இடைவெளி முறையாகப் பின்பற்றப்படுகிறது.
திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு துறையும் பணியாளர்களுக்கும் பயிற்சி செவிலியர்களுக்கும் திறன் மதிப்பீடுகள் (skill assessment) நடத்தப்பட்டது. பார்வைத் திறன் (Refraction) துறையானது விரிவான பயிற்சிப் பட்டறை (workshop) ஒன்றை நடத்தியது. மூத்த, இளம் செவிலியர்கள் என 12 அணிகளைக் கொண்டு பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது. படங்கள், வடிவங்கள், விளக்கப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டு மூத்த செவிலியர்கள் இளம் செவிலியர்களுக்கு விளக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அவற்றைக் கற்றுக்கொண்ட இளம் செவிலியர்கள் நடித்தும் விளக்கியும் (Role play) காட்டினர். சிறப்பாகப் புரிந்துக்கொண்டு வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கண் நரம்பியல் துறையானது அனைத்துப் பணியாளர்களுக்கும் திசுக்கள் (sclerosis) பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சியை நான்கு நாட்கள் நடத்தியது.
கண்ணாடிப் (Opticals) பிரிவானது அரவிந்தின் அனைத்து மையங்களிலுள்ள துறைப் பணியாளர்களுக்காகவும் வெவ்வேறு தலைப்புகளில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை காணொளி கருத்தரங்குகளை நடத்தியது.
பெரும்பாலான பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, சமையல் வகுப்புகளும் நகை வடிவமைப்பு வகுப்புகளும் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. யோகா வகுப்புகளையும் அடிப்படை ஆங்கில (Basic English) வகுப்புகளையும் வரும் வாரங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
மருத்துவம், பொது அறிவு, சமூகக் கடமை, தற்போதைய நாட்டு நடப்பு, தகவல் பரிமாற்றம், தனித்திறன் என பல்வேறு தலைப்புகளில் பயிற்சி செவிலியர்களுக்கும் பணியாளர்களுக்கும் சுழற்சி முறையில் மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் வகுப்பு எடுத்தனர்.
தனித் திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகள்
இல்லப் பராமரிப்புத் துறையினர் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தலைப்புகளில் மலர் அலங்காரப் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். அற்புதமான முன் தயாரிப்புகள் மற்றும் யோசனைகளுடன் இளம் பெண்கள் கலந்துகொண்டு சிறப்பான பங்களிப்பை அளித்தனர். போட்டியாளர்களின் திறமை மற்றும் படைப்பாற்றலைப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது.
‘தமிழ் கிராமப்புற நாட்டுப்புற பாடல்கள்’ என்ற கருப் பொருளுடன் பாட்டுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. உத்வேகம் உள்ள, ஆழ்ந்த அர்த்தம் நிறைந்த பாடல் வரிகளைத் தேர்வு செய்து பலரும் ரம்மியமாகப் பாடினர்.
Art from Waste எனும் பயன்படாத பொருட்களிலிருந்து கலைப் பொருட்களை உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டன. பயன்படுத்திய பொருட்களைத் தூக்கி எறியும் முன் அழகிய கலைப் பொருட்களாக மாற்றுவது எப்படி என்பதைப் பணியாளர்கள் இதன் மூலம் கற்றுக் கொண்டனர். அனைத்து துறைகளிலிருந்தும் கலந்துகொண்ட செவிலியர்களின் கலை ஆர்வத்தைப் பார்க்கும்போது படைப்பாற்றலுக்கு தடைகள் இல்லை என்பது புலனானது.
துணை மருத்துவமனைகளின் பங்களிப்பு
கோயம்புத்தூர் மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர், உடுமலைபேட்டை மற்றும் சிட்டி சென்டர் மருத்துவமனைகளும் தங்கள் நோயாளிகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஏற்ப கவனமாகவும் பாதுகாப்பாகவும் சிகிச்சை அளித்தன. செவிலியர்களுக்கு வகுப்புகளையும் தேர்வுகளையும் உடுமலைபேட்டை–அரவிந்த் பணியாளர்கள் நடத்தினர். கொரோனா வைரஸ் எனும் தலைப்பில் பல்வேறு வடிவங்கள், விளக்கப்படங்கள் கொண்டு மாபெரும் கண்காட்சியை நடத்தினர். திருப்பூர்-அரவிந்த் பணியாளர்கள், வழக்கமான கற்றல் வகுப்புகள் தவிர, கலைப் பொருட்கள், ஒரிகோமி ஆகியவற்றை செய்தனர். சிட்டி சென்டர் பணியாளர்கள், தங்கள் செவிலியர்களுக்காக விழிப்புணர்வு உரைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இணைவோம்! வெல்வோம்!!
இது போன்ற அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள, நம் பணியாளர் ஒவ்வொருவரது அர்ப்பணிப்பும் சிறப்பாக உள்ளது. வழக்கமான பணிகள் நிறுத்தப்படுவதால், அனைத்து துறைகளும் கொரோனா வைரஸை எதிர்கொள்ள கைகோர்த்து செயல்படத் தொடங்கின. ஆன்லைன் கருத்தரங்குகள் நடைபெறும்போது எவ்வித தடையும் ஏற்படா வண்ணம் மேற்பார்வையிட்ட ஐ.டி துறையினர், பணியாளர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போக்குவரத்துத்துறை, தொற்று ஏற்படாத வண்ணம் வளாகத்தைப் பராமரிக்கும் இல்லப் பராமரிப்புத் துறையினர், மருத்துவமனையின் சிறப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்டிடப் பராமரிப்புத் துறை, இந்த ஊரடங்கு நாட்களைப் பயன்படுத்தி நிலுவையில் இருந்த பணிகளைச் சிறப்பாக செய்து முடித்த எலக்ட்ரிகல்துறை, மருத்துவமனையில் இனிமையான சூழலை தினமும் பார்க்க உதவும் தோட்டப் பராமரிப்புத் துறை, சத்தான உணவை வழங்கும் காபி ஷாப் மற்றும் கேன்டீன் துறை என அனைவரும் ஒரு குழுவாகச் செயல்பட்டு வெற்றிகரமாக எதிர்கொள்கிறோம்.