Paykwik

உறுதியுடனும் துணிவுடனும் கொரோனாவை எதிர்கொள்வோம்

புத்தம் புதிய வழிமுறைகளே சிக்கலை திறம்பட எதிர்கொள்ள உதவும். தங்களது தனித்துவமான யோசனைகளால் பாண்டிச்சேரி-அரவிந்த் குழுவினர், ஊரடங்கு கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட விதத்தைக் அறிந்துக் கொள்வோம். 

அன்புள்ள அரவிந்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு,

உங்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவது எப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளது. இந்த செய்தி அறிக்கையைப் படிக்கும் நீங்கள் அனைவரும் குறிப்பாக இந்த கடினமான காலங்களில் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். இங்கு, நாங்கள் சுயக் கட்டுப்பாடைப் பின்பற்றுவதுடன், சமூக இடைவெளியையும் முறையாகக் கடைபிடிக்கிறோம். அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான கண் பராமரிப்பை வழங்குவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்வதில்லை.

இது கடினமான மாதமாக இருந்தாலும், ஊரடங்கின் நெறிமுறையைப் பின்பற்றி, கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த எதிர்பாராத நிலைமை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. சொல்லப்போனால், இது தொடக்கம்தான். மேலும் சில மாதங்களுக்கு இந்நிலை நீடிக்கப்போகிறது என்பதுதான் கசப்பான உண்மை. இருப்பினும், பதட்டமடைய தேவையில்லை. இந்த சூழலை உறுதியுடன் எதிர்கொள்ள தைரியத்தையும் நேர்மறை சிந்தனையையும் கைவிடக்கூடாது. மக்களைப் பாதுகாக்க அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது; அரசு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேவையான உதவிகளை அளித்து வருகிறது.

கடந்த கால நினைவுகளைப் பேசுவதால் குறிப்பிடும்படியான பயன் எதுவும் இல்லை என்றாலும் எங்கள் செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஊரடங்கு காலத்தில் எங்கள் மருத்துவமனையில் மேற்கொண்ட செயல்பாடுகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

R. வெங்கடேஷ் மற்றும் குழுவினர்

உள்கட்டமைப்பே மேம்பாட்டிற்கான அடித்தளம்

மருத்துவர்கள் முதல் துப்புரவுப் பணியாளர்கள் வரை பாண்டிச்சேரி-அரவிந்த் குழுவினர் அனைவரும் நிலைமையை உணர்ந்து, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு பாதுகாப்புடன் சேவையாற்ற தன்னலமற்ற ஆதரவைத் தொடர்ந்து அளிக்கின்றனர்.

  • நோயாளிகளுக்கு பாதுகாப்பான சூழலை மருத்துவமனைக்குள் ஏற்படுத்த, நுழைவாயிலில் கை கழுவும் பகுதிகள் முதல் விசாரணைப் பகுதி வரை புதிதாக உருவாக்குதல், நுழைவாயிலில் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் கிளினிக் அமைத்தல், காத்திருக்கும் பகுதிகளில் உள்ள இருக்கைகளை மாற்றியமைத்தல் (காத்திருக்கும் பகுதிகளில் உள்ள இருக்கைகள் ஒவ்வொன்றிலும் மூன்று நாற்காலிகள் இருக்கும். அவற்றில் நடுவில் உள்ள நாற்காலி கழற்றி எடுக்கப்பட்டது), மருத்துவமனை வளாகம் முழுவதையும் நோய்த் தொற்று இல்லாமல் தூய்மைப்படுத்துதல் போன்ற பெரும்பணிகளை ஒரே இரவில் குழுவினர் செய்து முடித்தனர்.
  • உடல் வெப்ப நிலையைப் பரிசோதிக்கும் இடங்களில் சமூக இடைவெளியை உறுதி செய்ய, வரிசையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் நீர்த்திவலைகள் பரவுவதைத் தவிர்க்கவும் முகமூடிகள் (mask), நுழைவாயிலில் வழங்கப்படுகின்றன.
  • பிளாஸ்டிக் திரையில் கூடாரம் செய்து ஆரம்ப கண் பரிசோதனை செய்யும் இடம் (Triage area) உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே காற்றோட்டம் இருப்பதையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்லிட் லேம்ப் பொருத்தப்பட்டு, ஸ்லிட் லேம்பில் நாடி வைக்கும் பகுதி, கூடாரத்திற்கு வெளியே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்லிட் லேம்பின் மற்றப் பகுதிகள், கூடாரத்திற்கு உள்ளே உள்ளன. மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் ஒரு கேடயமாக பிளாஸ்டிக் திரை செயல்படுகிறது. இதனால் நீர்த்திவலைகளின் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • ஸ்லிட் லேம்ப் பரிசோதனையின்போது நீர்த்திவலைகள் பரவுவதை மேலும் தடுக்க, மருத்துவரின் பின்னால் ஒரு மேஜை விசிறி (Fan) வைக்கப்பட்டுள்ளது. நோயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர் குறிப்பிட வேண்டியதையும் எழுத வேண்டியதையும் தவிர்க்க, துணைக்கு ஒரு மருத்துவர் (scribe doctor) நியமிக்கப்பட்டிருந்தார். இதன் மூலம் கணினி விசைப் பலகைகளையும் எழுதும் பொருட்களையும் நோயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர் தொடுவது தவிர்க்கப்பட்டது.
  • வைரஸ் பரவலில் குளிரூட்டப்பட்ட அறைகளுக்கும் பங்கு இருப்பதால் அறைகளுக்குள் இயற்கை காற்றோட்டம் அதிகம் இருக்கும்படி ஜன்னல்கள், கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
  • முன் களத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த தொற்றுநோய் அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாலும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வது தடைப்படக்கூடாது என்பதாலும் காணொளி ஆலோசனை வசதி (e-consultation) உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் வெளிப்படும் அபாயம் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • வெளி நோயாளிகளுக்கான பரிசோதனை முடிந்தபின் மாலை நேரங்களில் ஆரம்ப கண் பரிசோதனை செய்யும் இடத்தைக் (Triage area) கிருமி நீக்கம் செய்ய புற ஊதா ஒளியைப் (UV light room sterilization) பயன்படுத்தி, தூய்மைப்படுத்தப்பட்டது.

தேவையே புதிய கண்டுபிடிப்புகளுக்கான விதை

ஊரடங்கு காலத்தில் ஒட்டுமொத்த உலகே ஊடகங்களில் மூழ்கியிருந்தபோது பாண்டிச்சேரி-அரவிந்த், புத்தம் புதிய பொருட்களை, வழிமுறைகளைக் கண்டறிவதில் ஆழ்ந்து இறங்கியது. கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட அசாதாரண நிலைமையானது பல சவால்களை உருவாக்கியது. அவற்றை புதுமையான செயல்முறைகளால்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், இல்லப் பராமரிப்பு மற்றும் பராமரிப்புத் துறையினரின் அயராத முயற்சியால் பின்வரும் புதிய கண்டுபிடிப்புகள் விரைவாக நடைமுறைக்கு வந்தன.

DIY face shield (முகக் கவசம்):

கண் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மிக அருகில் சென்று பரிசோதிக்கும் தேவை உள்ளது. கொரொனோ நோய்த் தாக்கம் இருக்கலாம் என ஊகிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள எளிமையான, ஆனால் சிறப்பான பயனை அளிக்கக்கூடிய முகக் கவசம் உருவாக்கப்பட்டது. Do-It-Yourself எனப்படும் நமக்கு நாமே தயாரித்துக் கொண்ட கவசங்கள் இவை.

3D masks (3Dமுகமூடிகள்):

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்புக் கவசங்கள் (PPE) மிக அவசியம். உலகெங்கும் இதன் தேவை அதிகம் உள்ளதால் கடைகளில் பாதுகாப்பு கவசத்திற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த சிக்கலைப் புதுமையான வழிகளில் எதிர்கொள்ள, 3D வடிவில் பிரிண்ட் செய்யப்பட்ட முகமூடிகளையும் முகக் கவசங்களையும் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இறுக்கமான முகமூடியில் சிறப்பான வடிகட்டி (standard filter or N95 filter) பொருத்தப்பட்டுள்ளது. 3D முகமூடியை சோப்பு நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். N95 முகமூடியின் தரத்திற்கு இணையான வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

Uvidge:

N95 சுவாச முகமூடிகளின் பற்றாக்குறையை உலக மருத்துவமனைகள் அனைத்தும் எதிர்கொள்கின்றன. இதனை எதிர்கொள்ள, கைவசம் உள்ள சுவாச முகமூடிகளைத் தூய்மையாக்கி, மீண்டும் பயன்படுத்துவதே சிறப்பான யோசனை. புற ஊதா மின் விளக்குகளை குளிர்ப்பதன சாதனத்தில் (freezer box) பொருத்தி, அதில் 40-க்கும் மேற்பட்ட முகமூடிகளை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு வைப்பதன் மூலம் அவற்றில் உள்ள தொற்றுகள் நீக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்படுகின்றன. சுவாசக் கருவிகளை 15 முறை தூய்மைப்படுத்தி, மீண்டும் பயன்படுத்தலாம். சுவாசக் கருவிகளைப் பாதுகாப்பாக மீண்டும் பயன்படுத்த இது, எளிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வழிமுறை.

Autodispenser for hand sanitizer:

கிருமி நாசினி உள்ள பாட்டில்களை பலரும் பாட்டில்களைத் தொட்டு அழுத்துவதால் நோய்த் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதால் புதிய வழிமுறையைக் கண்டறிந்துள்ளோம். UPVC எனப்படும் பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் சாதாரணமாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு காலால் அழுத்தும் சாதனம் (Auto dispenser for hand sanitizer) உருவாக்கப்பட்டுள்ளது. இதை எளிமையாக உருவாக்கும் விதத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டபோது உலகெங்கும் இந்த எளிய, அவசிய சாதனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Foam stand for face shield (முகக் கவசம் வைப்பதற்கான ஸ்டாண்ட்):

முகக் கவசத்தில் கீறல் ஏற்படாமல் தடுப்பதற்கும், முகக் கவசத்தை எடுக்கும்போது அதன் முன்புறத்தைத் தொடாமல் கவனமாக எடுக்க்கவும் உறுதியான பிளாஸ்டிக்கில் ஸ்டாண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Slit lamp shield (ஸ்லிட் லேம்ப் கவசம்):

ஸ்லிட் லேம்ப்பில் பரிசோதிக்கும்போது மூச்சுக்காற்று மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் நீர்த்திவலைகள் எதிரில் உள்ளவர் மீது படாமல் தவிர்க்க, நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடைப்பட்ட ஸ்லிட் லேம்ப் பகுதியில் கவசம் (shield) வைக்கப்பட்டுள்ளது.

COVID – safe fundus photography:

ஃபண்டஸ் கேமராவில் பரிசோதிக்கும்போது நோய்த்தொற்றோ நீர்த்திவலைகளோ பரவாமல் தவிர்க்க, பாதுகாப்பிற்கு பிளாஸ்டிக் திரைகளும் கவசங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

Safety cabin for MRD:

நோயாளி விவரங்களைப் பதிவு செய்யும் MRD பணியாளர்களின் பாதுகாப்பிற்காக தனி பாதுகாப்பு அறை ஒன்று உருவாக்கப்பட்டது.

Covineed:

ஊரடங்குக் காலத்தின் உலகமெங்கும் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மிகவும் சாதாரணமாகத் தெரிந்தவை யாவும் இப்போது தொலைதூர கனவு போல் தெரிகின்றன. மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவது போன்ற தினசரி வேலைகள்கூட கடினமாகிவிட்டன. வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் கடைகள் / ஆன்லைன் வர்த்தகம் என அனைத்தும் தடைபட்டுள்ளதால் மருத்துவமனை வளாகத்திலே தற்காலிகமாக பலசரக்கு கடை (in-campus mini store) ஒன்று Covineed எனும் பெயரில் திறக்கப்பட்டுள்ளது. முகாம் பங்களிப்பாளர் (sponsor) ஒருவரின் உதவியால் ஆர்டர் செய்யப்பட்ட தினசரி தேவைக்கான பொருட்கள் வரவழைக்கப்பட்டு அலமாரிகளில் வைக்கப்பட்டுகின்றன. சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பணியாளர்கள், இந்த Covineed சேவையை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உடல், மன உறுதியே வலிமை

மருத்துவமனை சிறப்பாக இயங்க, துடிப்புடனும் ஊக்கத்துடனும் பணியாற்றக்கூடிய  செவிலியர்களின் பங்கு அளப்பரியது. தங்கள் குடும்பங்களை விட்டு தொலைவில் இருந்தாலும் கூட, அவர்களது உற்சாகம், படிக்க வேண்டும் என்ற விருப்பம், கடின உழைப்பு போன்றவை எப்போதும் சோர்ந்து போவதில்லை. முன்னெப்போதும் சந்தித்திராத இது போன்ற காலங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரை அவர்கள் உணர்ந்து உறுதியுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றி நோயாளிகளுக்கு அவசரகால சிகிச்சைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டனர். செவிலியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், அவர்கள் ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க, பல புதிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • விடுதியில் உள்ள செவிலியர்களிடம் சமூக இடைவெளியைப் பின்பற்ற, அங்கு தங்கியிருக்கும் செவிலியர்களைப் பிரித்து, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி செவிலியர்கள் இலவசப் பிரிவு வார்டுகளில் தங்க வைக்கப்பட்டனர். தேவையான கட்டில் போன்ற உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாரம் ஒருமுறை Whatsapp அழைப்புகள் மூலம் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்பட்டனர்.
  • ‘வெறுமையான மனதில் சாத்தான் குடியேறும் என்பதை நினைவில் கொண்டு, துறை ரீதியான வகுப்புகள், பஜனைகள், கலை பொருட்கள் செய்யும் வகுப்புகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டன. தேர்வு, ப்ராஜெக்ட், மாதிரிகள் செய்தல் போன்றவற்றை நடத்தும்போது செவிலியர்கள், உற்சாகத்துடன் குழுவாகப் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை விளக்கும் விதமாகவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் செவிலியர்கள் நாடகங்களை நடத்தினர். தனிப்பட்ட சுகாதாரம் குறித்தும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் மருத்துவர்கள் வகுப்புகள் எடுத்தனர். இந்த வகுப்புகள், எப்போதும் நடத்தப்படுபவைதான். செவிலியர்களின் அறிவுத் திறன் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த விழிப்புணர்வு காணொளிகள் திரையிடப்பட்டன. செவிலியர்களின் பொழுபோக்கிற்காக, உள் விளையாட்டுகள் தவிர, தொலைகாட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், செய்திகள் பார்ப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தடை என்பதே கல்விக்கு இல்லை

ஊரடங்குக் காலத்தில் தொடர் விரிவுரைகள்

பாண்டிச்சேரி-அரவிந்தில் மார்ச் 30, 2020 முதல் காணொளி கருத்தரங்குகள் மூலம் மருத்துவ வகுப்புகள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் நடத்தப்பட்டன. தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற விரிவுரையாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் பிரமாண்டமான இறுதிப் போட்டியான, ‘Lockdown Jugaad Series’ என்ற தலைப்பில் மருத்துவ தொழில்முறைகள், நோயாளிகளுக்கான பாதுகாப்பு, தரமான மருத்துவ சேவை தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. நாடு முழுவதிலுமுள்ள வந்திருந்த கண்டுபிடிப்புகளை வல்லுநர் குழு மதிப்பீடு செய்து மூன்று சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Kahoot quiz & Forum discussion(விநாடி வினா மற்றும் கலந்துரையாடல் மன்றம்)

வழக்கமான காணொளி கருத்தரங்குகளுடன் (webinars) கண் மருத்துவம் தொடர்பான விநாடி வினா (Kahoot quiz), கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. பல சிறப்புரையாளர்கள் மற்றும் முதுகலை மருத்துவர்கள் (PGs) இதில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

Writathon

அதிகபட்ச திறனை வெளிப்படுத்தவும், ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடவும் அதிக ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் நோக்கத்துடனும் Writathon எனும் கல்வித் திருவிழா நடத்தப்பட்டது. முதுகலை இறுதியாண்டு மருத்துவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதி பல்வேறு மருத்துவப் பத்திரிக்கைகளுக்கு சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்பட்டனர்.

IOL forums and glaucoma meetings

மருத்துவர்கள், தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ளவும் ஆய்வுகள் மற்றும் நவீன முறைகள் குறித்தும் அறிந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.

விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நிலவும் காலத்தில் நேரத்தில் பொது மக்களும் வீட்டிலிருந்து அலுவலகப் பணியாற்றுபவர்களும் நீண்ட நேரம் டிஜிட்டல் திரைகளைப் பார்க்க நேரிடுகிறது. இதனால் ஏற்படும் கண் அயர்ச்சியைப் போக்க விழிப்புணர்வு வீடியோக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

Click to view other newsletters